AB de Villiers: ஆசிய கோப்பைக்கான இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி குறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவிலியர்ஸ் விமர்சனம் செய்துள்ளார். 


இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை வரும் 30 ஆம் தேதி துவங்கவுள்ளது. இம்முறை இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இந்த தொடரை நடத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், நேபாளம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் களமிறங்குகின்றன. உலகக்கோப்பைத் தொடரை இந்தியா நடத்த திட்டமிட்டுள்ளதால் இந்தியா இம்முறை தொடரை நடத்தும் அணிகளில் ஒன்றாக இந்தியா பங்குபெறவில்லை. அதிலும் குறிப்பாக இந்த தொடரில் இந்திய அணி மிகவும் முக்கியமான நிபந்தனயுடன் களமிறங்குகிறது. அந்த நிபந்தனை ”இந்திய அணி பாகிஸ்தானுக்கு  விளையாட வராது” என்பதுதான். இதனை ஏற்காத பாகிஸ்தான் அணி பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் ஒத்துக்கொண்டது. 


இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணி இந்த ஆண்டு முழுவதும் சர்வதேச தொடர்களில் விளையாட தேர்வு செய்யாத சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலை தேர்வு செய்யவில்லை. மாறாக அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் யுஸ்வேந்திர சஹாலுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், இந்திய அணி குறித்து, தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஏபி டிவிலியர்ஸ் தனது கருத்தை யூட்டூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார். 




அதாவது அந்த விவாதத்தில் ஏபி டிவிலியர்ஸ் கூறியதாவது, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சஹாலுக்கு இடம் அளிக்கப்படாதது எனக்கு ஏமாற்றமாக உள்ளது. சஹால் போன்ற லெக் ஸ்பின்னர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக இந்திய அணி தரப்பில் மூன்று ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், சஹால் இல்லாதது இந்திய அணிக்கு மிகவும் பின்னடைவாக இருக்கும். ஆசிய  தொடருக்கான இந்திய அணியில் சஹாலுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்கிற பொழுது அவருக்கு உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான் என டிவிலியர்ஸ் அந்த விவாதத்தில் தெரிவித்துள்ளார். 


ஆசிய கோப்பைக்கான் இந்திய அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா. ஸ்டாண்ட்-பை வீரர்: சஞ்சு சாம்சன்