2023 ஆசிய கோப்பை நடைபெற இன்னும் ஒரு வாரத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் தரவரிசை முதலிடம் பிடித்து அசத்தியது. 

பாகிஸ்தான் முதலிடம்:

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்று ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தனர். இந்த தொடரை வென்றதுடன், ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் பாகிஸ்தான் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய 17 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 14ல் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாகிஸ்தான் தற்போது 23 போட்டிகளில் விளையாடி 2, 725 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் உள்ளன. 

பாகிஸ்தான் பலம், பலவீனம்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 118 ரேட்டிங் மற்றும் 2725 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா 118 மதிப்பீடுகள் மற்றும் 2714 மதிப்பீடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியா 113 மதிப்பீடுகள் மற்றும் 4081 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது தவிர, நியூசிலாந்து 104 ரேட்டிங் மற்றும் 2806 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 101 மதிப்பீடுகள் மற்றும் 2426 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றன. 

பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சிறந்து விளங்கினாலும், அவர்களின் மிகப்பெரிய பலமே பந்துவீச்சுதான். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 59 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை ஆல்-அவுட் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஐசிசி ஒருநாள் அணி தரவரிசை: 

தரவரிசை அணி போட்டிகள் புள்ளிகள் ரேட்டிங்
1 பாகிஸ்தான் 23 2,725 118
2 ஆஸ்திரேலியா 22 2,714 118
3 இந்தியா 36 4,081 113
4 நியூசிலாந்து 27 2,806 104
5 இங்கிலாந்து 24 2,426 101
6 தென்னாப்பிரிக்கா 19 1,910 101
7 வங்கதேசம் 28 2,661 95
8 இலங்கை 32 2,794 87
9 ஆப்கானிஸ்தான் 18 1,537 85
10 வெஸ்ட் இண்டீஸ் 38 2,582 68

பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டி சுருக்கம்: 

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்றது. தொடரின் முதல் இரண்டு போட்டிகள் அம்பாந்தோட்டையிலும் மூன்றாவது போட்டி கொழும்பிலும் நடைபெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தானை, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 19.2 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு சுருட்டினர். 

இதையடுத்து இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா பேட்டிங்கில் அதிரடி செய்து பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடி தந்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ளது, பின்னர் நசீம் ஷா ஃபசல் ஹக் ஃபரூக்கியின் ஓவரின் ஐந்து பந்துகளில் ரன்சேஸை முடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியைக் கொடுத்தார். 

பின்னர், மூன்றாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் 209 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.