2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான போட்டியின்போது ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டார் யுவராஜ் சிங். யுவராஜ் சிங்கின் அந்த சிக்ஸர்கள் இன்றும் மக்கள் கண் முன்னே வந்துபோகும். அதேபோல், கடந்த 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்டார். இந்த பட்டியலில் தற்போது நேபாளத்தின் தீபேந்தர் சிங் ஐரியும் இணைந்துள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் ஒரு ஓவரில் மொத்தம் 6 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
என்ன நடந்தது..?
ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பையில் ஏழாவது போட்டியில் நேபாளம் மற்றும் கத்தார் அணிகள் மோதியது. முதலில் பேட் செய்த நேபாளம் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. நேபாள அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் புர்டெல் (12), கேப்டன் ரோகித் (18) அவுட்டாகி அதிர்த்தி அளித்தனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக ஆசிப் ஷேக் 41 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், குஷால் மல்லா 18 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்தனர்.
அதன்பிறகு நேபாள அணியின் ஸ்கோர் மெல்ல சரிய தொடங்கவே, யாரும் எதிர்பார்க்காத வகையில் களமிறங்கிய தீபேந்திரா சிங் ஐரி 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து நேபாள அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல உதவினார். நேபாளத்தின் முதல் இன்னிங்ஸின் 19வது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்தார். 19வது ஓவர் வரை 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்த நேபாளம், இன்னிங்ஸ் முடிவில் 210 ரன்கள் எடுத்தது.
நேற்றைய போட்டியில் தீபேந்திரா சிங் ஐரி 21 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 300 ஸ்டிரைக் ரேட்டுடன் டி20 சர்வதேச போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். கடந்த 2023ம் ஆண்டு மங்கோலியாவுக்கு எதிராக 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து, அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
யார் இந்த தீபேந்திர சிங் ஐரி..?
தீபேந்திர சிங் ஐரி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நேபாள அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளிலும், 57 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தீபேந்திர சிங் ஏரி டி20 போட்டிகளில் 149.64 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 38.79 சராசரியுடன் 1474 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, ஒருநாள் போட்டியில், தீபேந்திர சிங் ஏரி 19.06 சராசரி மற்றும் 71.22 ஸ்ட்ரைக் ரேட் உடன் 896 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், பந்து வீச்சாளராகவும் தீபேந்திர சிங் ஐரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் தனது பந்துவீச்சில் 3.91 என்ற எகானமி மற்றும் 33.39 சராசரியுடன் ஒருநாள் போட்டிகளில் 38 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுதவிர டி20 போட்டிகளில் 6.06 என்ற எகானமியுடன் மற்றும் 18.75 சராசரியுடன் 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.