ஞாயிற்றுக்கிழமை நடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி உலகக்கப்பையில் ஒரு மறக்கமுடியாத தொடக்கத்தை தந்துள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி அதிரடி காட்டி 82 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு வழி நடத்தி சென்று அனைவரையும் கவர்ந்தார்.


ஆனால் அணியாக இதில் அவரது மட்டுமின்றி, புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கொடுத்த அட்டகாசமான பவுலிங் துவக்கமும் தான் காரணம். தொடக்க ஆட்டக்காரர்களை பவர்பிளேக்குள் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்தனர். அக்டோபர் 23ம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்களும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.



இந்திய அணி வெற்றி


160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 துருப்பு சீட்டு வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, ஹர்திக் பாண்டியா கோஹ்லியுடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கி பாகிஸ்தான் பவுலர்களை திக்குமுக்காட வைத்தனர். ஆட்டம் பெண்டுலம் முள் போல இருபுறமும் மாறி மாறி ஆட, கடைசியில் இந்திய அணி தனது குழு முயற்சியால் வென்றது.


தொடர்புடைய செய்திகள்: ”துணையை தேர்வு செய்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்.. இதற்கு இடமில்லை..” : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து


ஹர்திக் பாண்டியாவின் ஆளுமை


போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் நிகழ்த்திய அற்புதம் குறித்தும், அவரை "அடுத்த இந்திய கேப்டன்" என்றும் அடையாளம் காட்டிய விதம் பலரால் ரசிக்கப்பட்டது. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், சேசிங்கின் போது ஹர்திக் பாண்டியா நடந்துகொண்ட விதத்தை ரசித்தார். மேலும் அது அவரது தன்னம்பிக்கையையும், சூழ்நிலைகளை உணர்ந்து, அதற்கேற்றாற் போல விளையாடும் திறனைப் பிரதிபலிப்பதாக உணர்ந்தார்.



அடுத்த கேப்டன்?


"ஹர்திக் பாண்டியா விளையாடிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு ஐபிஎல் கேப்டனாக இருந்திருக்கிறார். ஒரு அணியை வெற்றிகரமாக வழி நடத்தி இருக்கிறார். ஐபிஎல்-இல் எவ்வாறு அழுத்தத்தை கையாண்டார் என்பது நமக்கு தெரியும். அதே போல இந்த போட்டியிலும் அழுத்தமான சூழ்நிலையில் புத்திசாலி தனமாக விளையாடினார். அணியில் ஒரு ஃபினிஷாராகவும் இருக்கிறார்.


ஃபினிஷாராக இருப்பதற்கு ஒரு மன உறுதி வேண்டும், எப்பேர்ப்பட்ட சூழலிலும் வெல்லும் மனநிலை இருக்க வேண்டும். அப்போது தான் அணியில் நீடிக்க முடியும். அதனை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் அவர்", என்றார் வாசிம் அக்ரம். அவரை தொடர்ந்து பேசிய வாக்கர் யூனிஸ், "வருங்காலத்தில் இந்திய கேப்டன் ஆனாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஐபிஎல் கேப்டனாக இருந்துள்ளார். கோப்பையும் பெற்று தந்துள்ளார். இப்போது இந்திய அணியின் முக்கியமான வீரராக இருக்கிறார். அவர் கேப்டனுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் இது போன்ற தருணங்களில் விளையாடுவது மூலம் நிறைய கற்றுக்கொள்கிறார்", என்றார்.