தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


சொதப்பும் சுப்மன் கில்:


முன்னதாக, செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரை தவிர மற்ற வீரர்கள் எல்லாம் மோசமாகவே விளையாடியாதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.  முக்கியமாக இந்திய அணி வீரர் சுப்மன் கில் இந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் மோசமாக விளையாடினார்.


அதன்படி, முதல் இன்னிங்ஸில் 12 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் அந்த ஆட்டத்திலும் சொதப்பினார். அதன்படி, 37 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்படி முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய சுப்மன்கில்லை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக்:


இந்நிலையில் சுப்மன் கில் தொடர்ச்சியாக இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அவரது டெஸ்ட் இடமானது வேறு வீரருக்கு சென்று விடும் என தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசுகையில், “ சுப்மன் கில்லின் இடம் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை இதுவரை வெளிப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 20 போட்டிகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியும் 30 ரன்களுக்குள் தான் சராசரி வைத்திருக்கிறார். எனவே அவரது இடத்தை விரைவில் இழக்க நேரிடும். மேலும் அவரது இடத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் மற்றும் ரஜத் படிதார் ஆகிய இருவருமே காத்துக் கொண்டிருக்கின்றனர்.


நிச்சயம் விரைவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சர்பராஸ் கான் ரன்களை மலை போல் குவித்து வைத்துள்ளார். எனவே சுப்மன் கில் இடம் அவருக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அதேபோன்று டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ரஜத் படிதார் மிகவும் வலிமையான வீரராக பார்க்கப்படுகிறார். அவருக்கும் அந்த இடம் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். முன்னதாக, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதை போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசமாக விளையாட நினைப்பதே சுப்மன் கில் தடுமாறுவதற்கான காரணம் என்று சுனில் கவாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.