கிரிக்கெட் உலகில் இன்றைய முக்கியச் செய்திகளில் ஒன்றாக மாறியிருப்பது, ஆஸ்திரேலியா அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது டேவிட் வார்னரின் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


ஓய்வு பெற விரும்பினேன்


2024ஆம் ஆண்டின் முதல் நாளில்  டேவிட் வார்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ”இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போதே எனக்குள் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற யோசனை வந்தது. எனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். அணி விரும்பினால் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் விளையாட தயாராக” இருப்பதாக கூறியுள்ளார். 


டேவிட் வார்னரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார். வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டாகும். 


வார்னரின் சாதனைகள்:


வார்னர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.  இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 இன்னிங்ஸில் களமிறங்கி 12 ஆயிரத்து 373 பந்துகளை எதிர்கொண்டு, 8 ஆயிரத்து 695 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் இவர்  ஒரே ஒருமுறை 300-க்கும் மேற்பட்ட ரன்களும், மூன்று முறை இரட்டைச் சதமும் விளாசியுள்ளார். இது மட்டும் இல்லாமல் 26 சதங்களும் 36 அரைசதங்களும் விளாசியுள்ளார். இதில் இவர் ஆயிரத்து 25 பவுண்டரிகளும் 69 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 335 ரன்களுக்கு நாட் - அவுட் ஆகும்.


அதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டில் 2009ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜனவரி 18ஆம் தேதி அறிமுகமானார். 161 போட்டிகளில் விளையாடி, 159 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இதில் இவர் 7 ஆயிரத்து 127 பந்துகளை எதிர்கொண்டு, 6 ஆயிரத்து 932 ரன்கள் குவித்துள்ளார். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 179 ரன்கள் ஆகும். இதில் 22 சதங்களும் 33 அரைசதங்களும் விளாசியுள்ளார். இதில் இவர் 733 பவுண்டரிகளும் 133 சிக்ஸர்களும்  பறக்கவிட்டுள்ளார். இவரது கடைசி ஒருநாள் போட்டி 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியே இவரது இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகும். 


டி20யிலும் அசத்தல்:


அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி இரண்டாயிரத்து 48 பந்துகளை எதிர்கொண்டு இரண்டாயிரத்து 894 ரன்கள் குவித்துள்ளார். இதில் இவர் ஒரு சதமும் 24 அரைசதங்களும் விளாசியுள்ளார். இதில் இவர் 256 பவுண்டரிகளும் 105 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். 


இதுமட்டும் இல்லாமல் ஐபிஎல்-லில் இதுவரை 176 போட்டிகளில் விளையாடி நான்கு ஆயிரத்து 572 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆயிரத்து 397 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்களும் 61 அரைசதங்களும் விளாசியுள்ளார். ஐபிஎல் லீக்கில் இதுவரை டேவிட் வார்னர் 647 பவுண்டரிகளும் 225 சிக்ஸர்களும் விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். 


கிரிக்கெட்டின் புஷ்பா


பேட்டிங் மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கில் முதல் பந்து முதல் கடைசி பந்து வரை மிகவும் வெறித்தனமாக களத்தில் ஃபீல்டிங் செய்யக்கூடிய டேவிட் வார்னரின் ஃபீல்டிங்கிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சரவதேச கிரிக்கெட்டில் இதுவரை 216 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார்.  


இந்தியாவில் உள்ள டேவிட் வார்னரின் ரசிகர்கள் அவரது கிரிக்கெட்டிற்கு மட்டும் இல்லாமல், அவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கும் பெரிய ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தின் புஷ்பா கதாப்பாத்திரத்துடன் வார்னரை ஒப்பிட்டு பதிவுகளை பகிர்ந்து வருவது வாடிக்கை. உலகக் கோப்பையின்போது கூட மைதானத்தில் புஷ்பா படத்தின் பாடல்கள் ஒலிபரப்பும்போது வார்னர் நடனமாடிய வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் உள்ளது.