இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையையும் பெற்று தந்தார். இந்திய அணியில் கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் இடம்பெற்று இருந்தார். அண்மையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 


இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக மகேந்திர சிங் தோனி களமிறங்கி இன்றுடன் 17ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகினார்.ரன் அவுட்டில் தொடங்கிய இவருடைய கிரிக்கெட் பயணம் கடைசியாக 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் ரன் அவுட் உடன் முடிந்தது. இந்திய கேப்டனாக இருந்து அனைத்து ஐசிசி தொடர்களையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவர் 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று தந்தார். 






இவை தவிர தோனியின் தலைமையில் தான் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 2009ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. அந்த இடத்தில் இந்திய அணி தொடர்ந்து 600 நாட்கள் நீடித்தது. மேலும் 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்றார். மேலும் 2011ஆம் ஆண்டு ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதையும் இவர் வென்று இருந்தார். 


மகேந்தி சிங் தோனி இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 10773 ரன்களும் டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களும் அடித்துள்ளார். இவ்வாறு எத்தனை ரன்கள் தோனி அடித்திருந்தாலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தொடரில் அவர் அடித்த சிக்சர் எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை. 


மேலும் படிக்க: 'போட்டிக்கு முன்னால ஃபோட்டோ’ - இந்திய அணி வீரர்களின் ஜாலி மொமண்ட்ஸ்!