கடந்த சில வாரங்களாக, இந்திய அணியின் சில வீரர்கள் தேர்வு செய்யபடாதது குறித்து பல ஊகங்கள் நிலவி வருகின்றன. அவர்களில் ஒருவர் இஷான் கிஷன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இஷான் கிஷன் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடாமல் விலகி இருந்தார். அவர் மனநல காரணமாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே விலகினார். மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் தனது பெயரை வாபஸ் பெற்றார். அதன்பிறகு, இஷான் கிஷன் துபாயில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 


கடந்த வாரம், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் கிஷன் இந்திய அணியில் இடம் பிடிக்காதது குறித்து மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட செய்தியாளர்களின் கேள்வியால் அதிருப்தி அடைந்தார். அப்போது பதில் அளித்த அவர், “இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப விளையாட விரும்பினா, அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்” என்று கூறியிருந்தார். இருந்த போதிலும், இஷான் கிஷன் தனது சொந்த அணியான ஜார்கண்டிற்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடவில்லை. சில நாட்களுக்கு முன்பு பரோடாவில் ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியாவுடன் ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் வகையில் இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 


நோட்டீஸ் அனுப்ப இருக்கும் பிசிசிஐ: 


இந்தநிலையில், இஷான் கிஷனின் இந்த அணுகுமுறை பிசிசிஐக்கு பிடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை விட ஐபிஎல் போட்டிக்கு வீரர்கள் முன்னுரிமை கொடுப்பதில் பிசிசிஐ கோபமடைந்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, ரஞ்சி டிராபியில் பங்கேற்காத அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப தயாராகி வருகிறது. வீரர்கள் காயம் இல்லை என்றால் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதில் பிசிசிஐ தெளிவாக உள்ளது. இப்படியாக சூழ்நிலையில், ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஐபிஎல் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பிசிசிஐ விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காயம் ஏற்படவில்லை என்றால் ரஞ்சி டிராபிதான்: 


கிடைத்த தகவலின்படி, “அடுத்த சில நாட்களில் பிசிசிஐ மூலம் அனைத்து வீரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபடும்.  ஒரு வீரர் தேசிய அணியின் தேர்வாகவில்லை என்றாலும், காயம் இல்லை என்றாலும் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும். காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். இந்தநிலையில், இஷான் கிஷன் உள்ளிட்ட ரஞ்சி டிராபியில் விளையாடாத வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. 


ஹர்திக் பாண்டியா:


2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியா தற்போது குணமடைந்து வருகிறார். அவர் மீண்டும் ஐபிஎல் 2024 மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக வலம் வர இருக்கிறார். 


இந்தியா தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு பிறகு, வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக வேண்டும். அதற்குள் இந்த பிரச்சினைகளையும் பிசிசிஐ சரிசெய்ய வேண்டும்.