மும்பை டெல்லி அணிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று மோதிக்கொண்டன. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளி பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்த போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இன்று (மார்ச் 9) இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்ட்ங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பம் மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் டெல்லி அணி இறுதியில் 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் மேத்யூஸ் மற்றும் யஸ்திகா டெல்லி அணியின் பவுலர்களை தண்டிக்கும் வகையில் விளையாடினர். ஒவ்வொரு ஓவரில் கிடைக்கும் நல்ல பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினர். பவர்ப்ளேயில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் மும்பை அணி எடுத்து இருந்தது. அதன் பின்னரும் அதிரடியைக் குறைக்காத இவர்கள் 8 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் குவித்தனர். மும்பை அணிக்கு தேவைப்படும் ரன்ரேட் 3.75, ஆனால் மும்பையின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணியின் ரன்ரேட் 7 ரன்களுக்கு மேல் இருந்தது. அதிரடியாக ஆடிவந்த யஸ்திகா 31 பந்தில் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மட்டும் 8 பவுண்டரிகளை பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு, 75 ரன்கள் குவித்தது. டெல்லி அணி வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினாலும், வித்தியாசத்தைக் குறைக்க போராடினர். குறிப்பாக 10 ஒவர்களுக்கு மேல் டெல்லி அணியின் வசம் இருந்தது. நிலையாக ஆடிவந்த மேத்யூஸ் 31 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் கை கோர்த்த ஹர்மன் ப்ரீத் மற்றும் பர்ண்ட் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வகையில் சிறப்பாக விளையாடினர்.
இறுதியில் மும்பை அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கில் ஹாட்ரிக் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. மேலும், தொடர்ந்து டேபிள் டாப்பராக உள்ளது.