இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வாழ்த்துகளை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
கூல் கேப்டன்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி இந்திய அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், வெற்றிகரமான கேப்டன் என அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வலம் வந்தார். எந்தவித கடினமான நிலைமையிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக முடிவெடுப்பதால் ரசிகர்கள் இவரை ‘கூல் கேப்டன்’ என அழைக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்தார்.
இவரது தலைமையில் தான் 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. டி20, 50 ஓவர், சாம்பியஸ் டிராஃபி என 3 கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு தோனி மட்டுமே சொந்தக்காரர். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார்.
ஐபிஎல் வெற்றி கேப்டன்
இதனிடையே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 15 ஆண்டுகளாக அணியை வழி நடத்தி வரும் தோனி இதுவரை 5 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக நடந்தார். நடப்பு தொடரிலும் சென்னை அணி தான் கோப்பையை வென்றிருந்தது. இந்திய அணி மட்டுமின்றி கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் தோனி இன்ஸ்பிரேஷனாக தான் உள்ளார்.
பிறதுறையில் சம்பவம் செய்யும் தோனி
கிரிக்கெட் மட்டுமல்லாது தோனி கால்பந்து விளையாட்டிலும் சிறந்தவர். மேலும் ராணுவம், விவசாயம் என பல துறையிலும் கால் பதித்த தோனி, தற்போது சினிமாவிலும் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அவரின் முதல் படமாக தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் படம் தயாராகிறது.
இதனிடையே தோனி தனது 42வது பிறந்தநாளை நாளை (ஜூலை 7) கொண்டாடுகிறார். இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த சில தோனி ரசிகர்கள் அவருக்கு 52 அடி உயர கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். 52இதில் தோனி இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு கையில் பேட் பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.