Matheesha Pathirana: சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் கலக்கிய மதீஷா பத்திரனா சர்வதேச அளவிலான அறிமுக போட்டியில் 16 வைடுகளை வீசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய வீரர்களில் ஒருவர் சென்னை அணிக்காக விளையாடிய இலங்கையைச் சேர்ந்த மதீஷா பத்திரனா. இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரனா மலீங்காவைப் போல் பந்து வீசும் இவர் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெருமையை தனது அறிமுக ஐபிஎல் தொடரில் பெற்றார். ஆனால் தொடக்கத்தில் இவரிடம் இருந்த சிக்கல், அதிகப்படியான வைடுகளை வீசுவது தான். இதனால் ஆத்திரமடைந்த சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலர்கள் வைடுகள் வீசுவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் வேறு கேப்டனின் கீழ் விளையாடவேண்டி வரும் என கூறியிருந்தார்.
அதன் பின்னர் வைடு வீசுவதை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் குறைத்துக் கொண்டனர். தொடரின் இடைப்பகுதியில் வைடுகளை குறைத்துக்கொண்ட பத்திரனா உட்பட சென்னை அணி பந்து வீச்சாளர்கள் தொடரின் இறுதியில் மீண்டும் தங்களது பழைய ஃபார்ம்முக்கு திரும்பினர். ஆனால் சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியதால் இது பேசுபொருளாகவில்லை.
இந்நிலையில், சென்னை அணிக்காக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்திய பத்திரனா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஷ்தான் அணி இன்று அதாவது ஜுன் 2ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. இந்த போட்டியின் மீது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களைப் போல் சென்னை அணியும் சென்னை அணி ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணியை அலறவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மதீஷா பத்திரனா, தன்னால் தனது அறிமுக போட்டியில் எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியுள்ளார். அதாவது இந்த போட்டியில் 8.5 ஓவர்கள் வீசியுள்ள அவர் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார். அதேபோல், இவர் மட்டும் 16 வைடுகள் வீசி ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றியை எளிதாக்கியுள்ளார். இந்த போட்டியில் பத்திரனா மட்டும் 16 வைடுகள் வீசியது தற்போது சென்னை அணி நிர்வாகத்துக்கும் சென்னை அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.