தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனின் நாளை அதாவது ஜூன் மாதம் 3-ஆம் தேதி ஆன்லைன் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎல் தொடரின் ஏழாவது சீசன் வரும் ஜுன் 12ம் தேதி தொடங்கும் என  ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், IDream திருப்பூர் தமிழன்ஸ், LYCA கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் Siechem மதுரை பாந்தர்ஸ் என 8 அணிகள் பங்கேற்க உள்ளன. கோவையில் நடைபெற உள்ள தொடரின் முதல் போட்டியில், கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோத உள்ளன.


ஆன்லைன் டிக்கெட் விற்பனை:


தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று அதாவது ஜூன் மாதம் 3ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் தொடங்கவுள்ளது. 


முழு அட்டவணை:


தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரின் அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12 ஆ தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 7 லீக் போட்டிகள்  என மொத்தம் 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என 32 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் லீக் போட்டியில் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோத உள்ளன. கடைசி லீக் போட்டியில் திருச்சி மற்றும் நெல்லை அணிகள் மோத உள்ளன.


நடைபெறும் மைதானங்கள்:


ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கும் லீக் சுற்றுப் போட்டிகள், கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளன. பருவநிலை பொறுத்து பிளே ஆப் போட்டிகளுக்கான மைதானங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள எல்.இ.டி விளக்குகள் மாற்றம் செய்யவேண்டியுள்ளதால், இந்த ஆண்டு இங்கு போட்டிகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


புதிய விதிமுறைகள்:


டி.என்.பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஐபிஎல் தொடரினைப் போல் DRS முறை அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல் இம்பேக்ட் ப்ளேயர் விதியும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  அதுமட்டுமின்றி, பிளே ஆப் போட்டிகள் மழையால் தடைபட்டால், மாற்று தேதியும் அறிவிக்கப்பட்டு பின்னர் போட்டி நடத்தப்படும் என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிஎன்பிஎல் வரலாறு:


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி கடந்த 2016 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  டி.என்.பி.எல் தொடரின் முதல் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடங்கி வைத்தார். இதுவரை 6  தொடர்கள்  நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இதில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறை டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. கடந்த சீசனில், சென்னை மற்றும் கோவை அணிகள் கோப்பையை பகிர்ந்துகொண்டன. வெற்றி பெற்ற அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.