உலக அளவில் மிகவும் அதிக நாடுகள் விளையாடப்படும் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. இந்த போட்டி கி.பி 13ஆம் நூற்றாண்டில் உருவாகி இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியானது கி.பி 1877ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. எந்தவொரு விளையாட்டிற்கும் உடற்தகுதி என்பது மிகவும் முக்கியம். அப்படி இருக்கும்போது, கிரிக்கெட் போட்டி மட்டும் என்ன விதிவிலக்கா? 


கிரிக்கெட் போட்டி விளையாட்டு என்பதைக் கடந்து இரண்டு நாடுகளுக்கு இடையிலான கௌரவம் என பார்க்கும் அளவிற்கு மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கண்களை ஆந்தைபோல் வைத்துக்கொண்டு போட்டிக்காக காத்திருக்கிறது. அதேபோல், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி என்றால் மைதானத்தைக் கடந்து அந்தந்த நாட்டு ஊடகங்களும் தங்களது வெறித்தனத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படியான அழுத்தம் கொண்ட கிரிக்கெட்டுக்கு சர்வதேச போட்டிகளில் மிகவும் அதிக வயதில் தகுதி பெற்று, தனக்கென தனி முத்திரையை தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


1. சூர்யகுமார் யாதவ் - இந்தியா


சூர்யகுமார் யாதவ் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வர்கள் அவரை அணிக்குள் எடுக்காமல் இருந்தனர். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடி சர்வதேச பந்து வீச்சாளர்களை நொறுக்கிய பின்னரும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. சூர்யாவிற்கு ஆதரவாக முன்னாள் வீரர்களும் சமூக வலைதளத்தில் ரசிகர்களும் குரல் கொடுக்க, கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம் கொடுக்கப்பட்டது. சூர்யகுமார் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கும்போது 30 வயது 6 மாதங்கள் ஆகியிருந்தது. இவரின் ருதரதாண்டவ ஆட்டத்தால் இந்திய அணியால் சூர்யகுமார் யாதவை தற்போது அணியில் இருந்து நீக்கமுடியவில்லை. 


இதுவரை 51 டி20 போட்டிகளில் 3 சதங்களும் 14 அரைசதங்களும் விளாசி மொத்தம் 1780 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்டைரைக் ரேட் 174.34ஆக உள்ளது. 




2. மைக்கேல் ஹஸ்ஸி - ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலிய அணியில்  சர்வதேச கிரிக்கெட் விளையாட மிகவும் அதிக வயதில் அறிமுகமான வீரர் ஆவார். இவர் தனது சர்வதேச கிரிக்கெட்டை 30 வயதில் தொடங்கிய ஹஸ்ஸிக்கு இன்றுவரை ரசிகர்கள் அதிகம். அவர் 79 டெஸ்ட், 185 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் பங்கேற்று, 12000 ரன்களுக்கு மேல் குவித்து, ஆஸ்திரேலிய மிடில் ஆர்டரின் முதுகெலும்பாகவும், ஆஸ்திரேலிய அணியின்  மிகவும் பிரபலமான வெற்றிகளுக்கு காரணமாகவும் இருந்தார்.


மேலும் ஐ.பி.எல்லிலும் தனது முத்திரையைப் பதித்தார். குறிப்பாக 2013 இல் சென்னை அணிக்காக பேட்டிங் செய்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.




3. சயித் அஜ்மல்


பாகிஸ்தான் அணியில் 31வயதில் இணைந்து அதன் பின்னர், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக உயர்ந்தவர்தான் சயித் அஜ்மல். சிறந்த வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தனது முதல் சர்வதேச போட்டியில் இந்தியாவை எதிர்த்து களமிறங்கினார். மொத்தம் 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளும், 63 டி20 போட்டிகளில் 85 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்ல இவரும் ஒரு முக்கியமான காரணம் ஆவார்.