இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹன்ட்ரட் லீக் சீசனில், 27 வயதான ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் அரிய சாதனை ஒன்றை தனது பெயரில் பதிவுசெய்துள்ளார். தி ஹன்ட்ரட் லீக் சீசனின் 13வது போட்டியில் ஓவல் இன்வின்சிபிள் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைப்பெற்றது.போட்டிக்கு முன்பு காயமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இஹ்சானுல்லாவுக்குப் பதிலாக ஜான்சன் இன்விசிபிள்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம், தி ஹன்ட்ரட் லீக் சீசனில் ஸ்பென்சர் ஜான்சனின் அறிமுக போட்டியாக அமைந்தது. 


இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன், தான் போட்ட 20 பந்துகளில் 19 பந்துகளை டாட் செய்து 3 விக்கெட்களை அள்ளினார்.


இதையடுத்து, அறிமுக போட்டியிலேயே 1 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். ஸ்பென்சர் பந்துவீசும்போது ஜோஸ் பட்லர், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர்கள் களத்தில் இருந்தனர். இவர்கள் அனைவரையும் ஸ்பென்சர் ஜான்சன் தனது வேகத்தால் ஏமாற்றி ரன் எண்ணிக்கை கட்டுப்படுத்தினார். 






ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அவர், தனது முதல் பத்து பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுகொடுத்தார். தொடர்ந்து, தனது கடைசி 10 பந்துகளில் ஒரு ரன்னை கூட விட்டுகொடுக்காத அவர், உசாமா மிர், டாம் ஹார்ட்லி மற்றும் ஜோசுவா லிட்டில் போன்ற வீரர்களை வெளியேற்றி அசத்தினார். 


ஆஸ்திரேலியா அணிக்கு தேர்வான ஜான்சன்: 


ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான முதல் போட்டியில் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜோஷ் ஹேசில்வுட் , மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஜான்சன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் முத்திரை பதிக்கலாம். 






யார் இந்த ஸ்பென்சர் ஜான்சன்..? 


இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக தனது முதல் தர போட்டியில் அறிமுகமான ஜான்சன், 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 20 விக்கெட்களை வீழ்த்தினார். இதில், இரண்டு 5 விக்கெட்களும் அடங்கும். மேலும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 6 விக்கெட்களையும், இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது, இதில் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:


மாட் ஷார்ட், டிம் டேவிட்ஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஸ்பின்னர் ஜான்சன், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட்.