Sunil Gavaskar Eden Garden: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இனி விளையாடமாட்டேன் என சுனில் கவாஸ்கர் முடிவெடுக்க காரணமான நிகழ்வு கீழே விளக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து சுற்றுப்பயணம்:
1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்று ஒட்டுமொத்த, உலகையே திகைக்கச் செய்தார் இந்திய கேப்டன் கபில் தேவ். இதன் மூலம், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராகவும், கிரிக்கெட்டை நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரராகவும் உருவெடுத்தார். இந்நிலையில் தான், தலா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வந்தது.
டெல்லி டெஸ்டில் சொதப்பிய கபில் தேவ்:
தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்ற நிலையில், கடைசி நாளில் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால், கபில் தேவ் மோஷமான ஷாட்களை முன்னெடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியுற்றது. இந்த தோல்விக்கு காரணம் கபில் தேவின் மோசமான ஷாட்கள் தான் என கூறி, அவரை அடுத்த போட்டியில் இருந்து பிசிசிஐ நீக்கியது.
கபில் தேவின் குற்றச்சாட்டும் - கவாஸ்கரின் மறுப்பும்:
தான் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டதற்கு, சுனில் கவாஸ்கர் தான் காரணம் என கபில் தேவ் குற்றம் சாட்டினார். ஆனால், இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனவும், அவரை அணியில் இருந்து நீக்குவது என்பது தேர்வுக்குழுவின் முடிவு என்றும் கவாஸ்கர் விளக்கமளித்தார்.
கொல்கத்தா டெஸ்டில் கவாஸ்கருக்கு நேர்ந்த அவமானம்:
கபில் தேவின் குற்றச்சாட்டால் எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு நாட்கள் பேட்டிங் செய்தும் 7 விக்கெட்டுகளை இழந்து 437 ரன்களை மட்டுமே சேர்த்தது ரசிகர்களை ஆத்திரமூட்டியது. ”கவாஸ்கர் டவுன் டவுன், கவாஸ்கர் அவுட்” என முழக்கங்களை எழுப்பினர். அதோடு, ”நோ கபில், நோ டெஸ்ட்” எனவும் முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர், இன்னிங்ஸை டிக்ளேர் செய்யுங்கள் என சுனில் கவாஸ்கரிடம் வலியுறுத்தினர்.
முடிவுக்கு வந்த நெடும்பயணம்:
தொடர்ந்து, இந்திய வீரர்கள் பந்துவீச மைதானத்திற்குள் வரும் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்களை சுனில் கவாஸ்கர் மீது வீசினர். இதனால் ஆத்திரமடைந்த கவாஸ்கர் இனி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளயாட மாட்டேன் என அறிவித்தார். இதன் மூலம் 1975ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக தொடர்ந்து 106 போட்டிகளில் விளையாடி வந்த சுனில் கவாஸ்கரின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாட மாட்டேன் என்ற தனது முடிவை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கவாஸ்கர் திரும்பப் பெற்றார்.