ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மார்ச் 4ம் தேதி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தாய்லாந்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 52. அவரது திடீர் மரணம் கிரிக்கெட் உலகை பெருமளவில் உலுக்கியது.  அவரது உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 


ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களையே வார்னேவின் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 52 வயதான அவரது மறைவுக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர் . இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று அவருக்கு ஃபேர்வெல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. 




இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான்கள், 50000 ரசிகர்கள் முன்னிலையில் வார்னேவுக்கு வழிஅனுப்பும் விழா அனுசரிக்கப்பட்டது. மேலும் மெல்போர்ன் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டிற்கு ‘ஷேன் வார்னே ஸ்டாண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்ட பலரும் வார்னே குறித்தான அன்பை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக வார்னேவின் முகத்தை தன்னுடைய தொடையில் டாட்டூவாக குத்திவந்த ரசிகை ஒருவர் அவர் குறித்து நெகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். கெல்லி என்ற அந்த மூதாட்டி தன்னுடைய தொடையில் வார்னேவின் முகத்தை தத்ரூபமாக டாட்டூ குத்தியிருந்தார். 


இது குறித்து பேசிய அவர், நான் 23 வருஷமாக குடும்ப சிக்கலிலும், மன உளைச்சலுக்குள்ளான உறவிலும் சிக்கித் தவித்தேன். ஒருமுறை என்னை சந்தித்த வார்னே என்னை நானே காதலிக்க கற்றுகொடுத்தார்.  அதற்குபின் நான் பலமுறை அவரிடம் பேசினேன். நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம். அவர் கிரிக்கெட்டில் மட்டுமல்ல பொதுவாக மிகவும் அறிவாளியான ஒருவர். தற்போது கிலியோவுக்கு 5 பேரக்குழந்தைகள் உள்ளனர்.