விராட் கோலி ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளன. விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் "பிசிசிஐ முறையான பேச்சுவார்த்தை எதுவுமே நடத்தவில்லை, இந்த முடிவு குறித்து எதுவுமே தெரியாது" என்றிருந்தார். அதனை அடுத்து பிசிசிஐ மீது கங்குலி மீதும் பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும். ஆனால் இது பிசிசிஐ ஆல் இன்று நேற்று நடத்தப்படும் விஷயம் அல்ல, பல ஆண்டுகளாக அவர்களின் இந்த கேப்டன்சி சர்ச்சை விவகாரம் தொடர்ந்து வருகிறது. அதில் முதலில் பாதிக்கப்பட்டவர் கபில் தேவ்.



கபில் தேவ்


இந்தியாவிற்கு முதன்முதலில் உலகக்கோப்பை பெற்றுத்தந்த கேப்டன் அடுத்த வருடமே அணியில் இருந்து நீக்கப்பட்டார். காரணம் அவரது சுமாரான ஆட்டம் என்று அப்போதைய செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் அவரையும் இதே போல் தான் முன்னறிவிப்புகள் ஏதும் இன்றி கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். கபில் தேவ் அப்போது அளித்த பேட்டியில், "என்னுடன் பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்து யாரும் பேசவில்லை, பிசிசிஐ முக்கிய பொறுப்பான கேப்டன் பதவியை பொம்மை போல வைத்து விளையாடுகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி சுனில் கவாஸ்கரை கேப்டன் ஆக்கினார்கள் பிசிசிஐ.



சச்சின் டெண்டுல்கர்


சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கொண்ட சச்சின் டெண்டுல்கருக்கும் இதே போன்ற அணுகுமுறையை தான் பிசிசிஐ வழங்கியுள்ளது. 1996ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் கேப்டன் பதவியில் அமர்த்தப்பட்ட சச்சின் டெண்டுல்கர், அதற்கு அடுத்த வருடமான 1997ல் டிசம்பர் மாதம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அப்போது அவர் அதுகுறித்து கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர் மீண்டும் 1999ஆம் ஆண்டு கேப்டன் பதவியை அவரிடம் கொடுத்தனர். ஆனால் சீக்கிரமாகவே அவரே அதிலிருந்து விடுப்பட்டுக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதாக காரணம் கூறினார். ஆனால் பொன்னர் அவர் எழுதிய சுய சரிதை புத்தகத்தில் பிசிசிஐ உடன் சரியான தொடர்பு இல்லை, என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதே ஊடகங்கள் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன் என்று எழுதியிருந்தார். 



சவுரவ் கங்குலி


கேப்டன் தேடல், தலைமை வெற்றிடம் ஆகிய பிரச்சனைகளுக்கு நடுவில் சூதாட்ட விவகாரம் இந்திய அணியை புரட்டி போட்டது. முக்கிய வீரர்கள் தடை பெற்றதால் அணி சீர்குலைந்து இருந்த சமயம். 2000-த்தில் கங்குலியிடம் கேப்டன்சி ஒப்படைக்க பட்ட பின்பு, அவர் சச்சினை போல இல்லாமல், வெற்றிகரமான இந்திய அணியை உருவாக்க முனைந்தார். கங்குலி தலைமையிலான அணி வெற்றி மீது வெற்றிகள் குவிக்க துவங்கியது. 2003 உலக கோப்பையில் சவுத் ஆப்ரிக்காவை வென்றது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. அப்போது அவர் உலகக்கோப்பையின் இருதிப்போட்டி வரை இந்தியாவை அழைத்து சென்றார். அப்போதுதான் பேரிடி இந்திய அணிக்கு காத்திருந்தது. இந்திய அணி வீரர்கள் அடிக்கடி குறிப்பிடும் டார்க் பீரியட் வந்தது, கிரேக் சேப்பல் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார். அதனை கங்குலி ஆரம்பத்தில் விரும்பினாலும், போகப்போக கிரேக் சேப்பல் தீவிரமாக மாற ஆரம்பித்தார். வெளிப்படையாகவே இருவருக்கும் இடையிலான சண்டை பெரும் எரிமலை குழம்புபோல் தகதகத்துக் கொண்டிருந்தது. அதன் காரணமாக கங்குலி 2005 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு சில வாரங்கள் கழித்து ஒருநாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். 2006ல் டெஸ்ட் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அப்போதைய கிரிக்கெட் விமர்சகர்கள் பிசிசிஐ சரியாக தொடர்பு கொள்ளாதது தான் பிரச்சனை என்று எழுதினார்கள். அப்போது கங்குலி கூறினார், "சேப்பல் மட்டும் இதற்கு காரணமில்லை என்று எனக்கு நன்றாக தெரியும்" என்றார். 



விராட் கோலி


2014ல் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்ததும் கோலியிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. 2017ல் எல்லா வகையான போட்டிகளுக்குமான கேப்டன் ஆனார். அந்த வகையில் வேலை பளு அதிகமாக இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக்கிக்கொண்டார். பின்னர் சில மாதங்களிலேயே ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக தொடர கோலி விரும்பியபோதிலும் பிசிசிஐ ரோஹித் ஷர்மா ஒருநாள் அணியையும் தலைமை தங்குவார் என்று அறிவித்தது. ஆனால் தற்போதைய பிசிசிஐ சேர்மன் கங்குலி பேசுகையில், "இந்த முடிவு எடுக்கப்படும் முன்பு கோலியிடம் கருத்து கேட்கப்பட்டது" என்று கூறியுள்ளார். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அதனை கோலி மறுத்துள்ளார், அவரிடம் பிசிசிஐ எந்த வித தொடர்பும் மேற்கொள்ள வில்லை என்று தெரிவித்தார். மேலும் டி20 கேப்டன்சியை தொடர கங்குலி கேட்டுக்கொண்டதாக கூறுவது போல எதுவும் நடக்கவில்லை என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.


இப்படி கேப்டன்கள் மீது 1984ல் இருந்தே அராஜக போக்கை கடைபிடித்து வரும் பிசிசிஐ மீது தற்போது பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.