புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்திலே மார்கஸ் ஹாரிசின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து டேவிட் வார்னரும், மார்னஸ் லபுசானே இணைந்து அபாரமாக ஆடினர். வார்னர் 95 ரன்கள் குவித்த நிலையில், பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரில் தனது 6 வது சதத்தை கடந்த ராபின்சன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 18 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 2 ரன்களின் பென்ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.
மறுமுனையில், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆண்டர்சன் பந்தில் 93 ரன்களில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் தன் பங்கிற்கு 51 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களும், ஆண்டர்சன் 2 விக்கெட்களும், பிராட், ஓக்ஸ், ராபின்சன் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே பேரிடியாக இருந்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பர்ன்ஸ், ஸ்டார்க் வீசிய பந்தில் 4 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, ஹஸீப் ஹமீதும் 6 ரன்களில் அறிமுக வீரர் நேசர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இந்தநிலையில், இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பர்ன்ஸ், ஸ்டார்க் பந்து வீச்சில் இந்தமுறை அவுட் ஆனது போலவே, ஆஷஸ் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸ், முதல் பந்தில் அவுட் ஆனது தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ச்சியாக பர்ன்ஸ், ஆஸ்திரேலியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் பந்தில் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்