சிகே நாயுடு டிராபியில் சௌராஷ்டிராவின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிட் பேக்கில் மது பாட்டில்கள் மற்றும் பீர்களை வைத்திருந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் 23 வயதுக்குட்பட்ட 5 கிரிக்கெட் வீரர்களின் கிட் பேக்கில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


நடந்தது என்ன..? 


ஜனவரி 25 அன்று, சௌராஷ்டிரா அணி சிகே நாயுடு டிராபியில் போட்டியை நடத்தும் சண்டிகரை சொந்த மண்ணில் தோற்கடித்தது. இதற்குப் பிறகு, சௌராஷ்டிரா கிரிக்கெட் வீரர்கள் ராஜ்கோட் திரும்பிச் செல்லும் போது, ​​சண்டிகர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு சில வீரர்களின் கிட் பேக்கில் மது பாட்டில்களை கண்டு கஸ்டம் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌராஷ்டிராவை சேர்ந்த 5 கிரிக்கெட் வீரர்களிடம் 27 மதுபாட்டில்கள் மற்றும் 2 பீர் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 24 மணிநேரம் ஆகியும் காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. 


சம்பந்தப்பட்ட வீரர்களான பிரஷாம் ராஜ்தேவ், சமர்த் கஜ்ஜர், ரக்ஷித் மேத்தா, பார்ஷ்வராஜ் ராணா மற்றும் ஸ்மித்ராஜ் ஜலானி ஆகியோரின் கிட்களில் மதுபானம் மற்றும் பீர் பாட்டில்கள் இருப்பது குறித்து சுங்க அதிகாரிகள் உடனடியாக சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.






சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கூறியது என்ன?


இதைத் தொடர்ந்து சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சண்டிகரில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது, இதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் நெறிமுறைகள் மற்றும் ஒழுங்கு குழு மற்றும் உச்ச கவுன்சில் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.