இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரவீந்த்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு காரணமாக சர்ஃப்ராஸ் கான், சவுரப் குமார்,வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 


இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25 முதல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி தொடங்குகிறது. 






இரண்டாவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெரிய அடியை சந்தித்துள்ளது.  ரவீந்திர ஜடேஜாவும், கே.எல்.ராகுலும் காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.


இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “விசாப்பட்டினத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் நான்காவது நாளில் ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. அதேபோல், கே.எல்.ராகுல் வலது காலில் வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரையும் பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.






மேலும், ”இந்திய அணியில் சர்பராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தேர்வுக் குழு சேர்த்துள்ளது. அவேஷ் கான் தனது ரஞ்சி டிராபி அணியான மத்தியப் பிரதேசத்துடன் தொடர்ந்து விளையாடுவார் என்றும், தேவைப்பட்டால் டெஸ்ட் அணியில் இணைவார்” என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 


இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்),  துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான், ரஜத் படிதார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சவுரப் குமார்.  


இங்கிலாந்து டெஸ்ட் அணி:


ஜோ ரூட், ஜாக் க்ராலி, பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ரெஹான் அகமது, ஜானி பேர்ஸ்டோ, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), ஒல்லி போப், கஸ் அட்கின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச்