சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள 2 புதிய அரங்குகளை வரும் 17ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 


இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் : மார்ச் 13-ஆம் தேதி டிக்கெட் விற்பனை 


சென்னையில் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கு மார்ச் 13ம் தேதி டிக்கெட் விற்பனை செய்யப்படும் எனவும், insider.in என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் எனவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.


மேலும், இந்த போட்டிக்கு மார்ச் 18ம் தேதி முதல் நேரடியாகவும் டிக்கெட்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரி முதல் போட்டி வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 22ல் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. 


அணி விவரம்:


ஆஸ்திரேலிய ஒருநாள் அணி : பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.


ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவித்த ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா அறிவித்த 16 பேர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் அணியில் 9 வீரர்கள் தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியா ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அதேபோல், தனிப்பட்ட விஷயத்திற்கு ஆஸ்திரேலியா சென்றுள்ள பாட் கம்மின்ஸும் அணிக்கு திரும்பலாம். 


இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி , முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி (மும்பை வான்கடே மைதானம்)
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி (டாக்டர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்)
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி (எம்ஏ சிதம்பரம் மைதானம் - சென்னை)


சேப்பாக்கம் மைதானம்:


எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம், இது சேப்பாக்கம் மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1916 இல் நிறுவப்பட்டதால் பழமையான மைதானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மைதானம் நிறுவப்பட்டதிலிருந்து பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. பிசிசிஐயின் முன்னாள் தலைவர் எம்.ஏ.சிதம்பரத்தின் நினைவாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் பெயர் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் பிட்ச் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு இந்த ஒருநாள் தொடரானது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.