உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்பவர் பென்ஸ்டோக்ஸ். இக்கட்டான நேரத்தில் அதிரடியாக ஆடுவதிலும், நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசுவதிலும் வல்லவர். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகிய பிறகு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பென்ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.


இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டிகிளப் போட்டியில் பென்ஸ்டோக்ஸ் பங்கேற்று ஆடி வருகிறார். வொர்ஸ்செஷ்டயர் அணிக்கும், துர்காம் அணிக்கும் நடைபெறும் போட்டியில் துர்காம் அணிக்காக பென்ஸ்டோக்ஸ் பங்கேற்று ஆடி வருகிறார். இந்த போட்டியில் முதலில் ஆடிய துர்காம் அணிக்காக களமிறங்கிய பென்ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசி அந்த ஓவரில் மட்டும் 34 ரன்கள் குவித்தார்.




59 பந்துகளில் 70 ரன்களுடன் பேட் செய்த பென்ஸ்டோக்சிற்கு 18 வயதான ஜோஸ் பாகர் பந்துவீசினார். சுழற்பந்துவீச்சாளரான அவரது பந்தில் ஸ்டோக்ஸ் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். அடுத்த பந்தும் சிக்ஸ், அதற்கு அடுத்த பந்தும் சிக்ஸ், நான்காவது பந்து சிக்ஸ், 5வது பந்து சிக்ஸ் என தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த பந்து பவுண்டரி கோட்டிற்கு முன்பு விழுந்து பவுண்டரியாக சென்றது. இதனால், அந்த ஓவரின் தொடக்கத்தில் 70 ரன்களில் தொடங்கிய ஸ்டோக்ஸ் அந்த ஓவரில் 100 ரன்களை கடந்தார். கவுன்டிபோட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகவும் இது பதிவாகியது.






இந்த இன்னிங்சில் மட்டும் பென்ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் 8 பவுண்டரி 17 சிக்ஸர்களுடன் 161 ரன்களை விளாசினார். பெடிங்கம், டிக்சனும் சதமடித்ததால் துர்காம் அணி முதல் இன்னிங்சில் 580 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய வொர்செஸ்டர்ஷையர் அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.


இங்கிலாந்து அணி ஜூன் மாதத்தில் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடரில் ஆட உள்ள நிலையில் பென்ஸ்டோக்ஸ் அசுர பார்மில் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண