மன்கட் செய்வதற்கு முன்பாக தீப்தி சர்மா தன்னை எச்சரிக்கை செய்யவில்லை என இங்கிலாந்து வீராங்கனை சார்லோட் டீன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.  இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று முன்தினம் நடந்தநிலையில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக மன்கட் முறையில் தீப்தி சர்மா எடுத்த விக்கெட் அமைந்தது.


முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்த நிலையில்,  இங்கிலாந்து அணி 118 ரன்கள் எடுப்பதற்கும் 9 விக்கெட்களை இழந்தது. கடைசி விக்கெட்டை விடாமல் சார்லோட் டீன் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு 17 ரன்கள் தேவையென இருந்த நிலையில் சார்லோட் டீன் விக்கெட்டை எடுக்கமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். அந்த நேரத்தில் மன்கட் முறையில் தீப்தி ஷர்மாவால் சார்லோட் டீன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 






வெற்றியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணி இந்த தோல்வியால் மிகுந்த வேதனையடைந்தது. இங்கிலாந்து கேப்டன் எமி ஜோன்ஸ் போட்டியிலேயே இதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், அவுட் ஆன சார்லோட் டீன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டது அனைவரையும் உருக்கியது.


இந்தநிலையில், இங்கிலாந்து வெற்றிபிறகு நாடு திரும்பிய தீப்தி சர்மா "நாங்கள் சார்லோட் டீனை பலமுறை எச்சரித்தோம், ஆனால் அவர் கேட்கவில்லை, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அம்பயர்களிடமும் சொன்னோம். ஒவ்வொரு அணியும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்களும் அதையே விரும்பினோம். நாங்கள் எந்த விதியையும் மீறவில்லை” என்று தெரிவித்தார். 










இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் தனது ட்விட்டர் பக்கத்தில், ” போட்டி முடிந்தது, சார்லி ரூல்ஸ் படி வெளியேற்றப்பட்டார். போட்டியிலும் தொடரிலும் இந்தியா வெற்றி பெற தகுதியானது. ஆனால் எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. அவை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், எச்சரிக்கைகளைப் பற்றி பொய் சொல்லி அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தியா உணரக்கூடாது.” என்று பதிவிட்டிருந்தார்.