Rohit Sharma: தலைக்கு மேல் கத்தி..! கப் அடிச்சா கேப்டன்சி, இல்லன்னா வீட்டுக்கு தான் - ரோகித் சாதிப்பாரா?

Rohit Sharma IND Vs NZ Final: சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முடிவை பொறுத்து ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய பிசிசிஐ (BCCI) திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

Rohit Sharma IND Vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

Continues below advertisement

இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை:

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேநேரம், சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியின் முடிவின் அடிப்படையிலேயே, எதிர்கால இந்திய அணிக்கான முடிவுகளை பிசிசிஐ எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐயின் அதிரடி திட்டம்:

சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில், வரும் 2027ம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வலுப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. மேலும், அடுத்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான வீரர்களின் தேர்வும் அமைய உள்ளது. மிகவும் முக்கியமாக கேப்டன் ரோகித் சர்மாவின் எதிர்காலமும் இந்த இறுதிப்போட்டியையே சார்ந்துள்ளது. உலகக் கோப்பைக்கு தயாராவதற்கான அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, நிலையான கேப்டனை கொண்டிருக்கவே பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோகித் தலைக்கு மேல் கத்தி:

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவை தாண்டி அடுத்த கேப்டனை நியமிப்பது குறித்து பிசிசிஐ கடுமையான விவாதத்தில் ஏற்கனவே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியை முன்னிட்டு, வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தையும் அறிவிக்காமல் பிசிசிஐ காலம் தாழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடனே, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அணியின் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை முன்னெடுப்பதற்கு ரோகித் சர்மாவும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிசிசிஐ வட்டாரங்கள் சொல்வது என்ன?

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, ”ரோகித் இன்னும் தன்னிடம் கொஞ்சம் கிரிக்கெட் மீதமுள்ளதாக நம்புகிறார். எதிர்காலத்தில் தனது திட்டங்களைத் தெரிவிக்குமாறு அவரிடம் கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவது அவரது விருப்பம், ஆனால் கேப்டன் பதவியில் தொடர்வது குறித்து மற்றொரு விவாதம் இருக்கும். அணி உலகக் கோப்பைக்குத் தயாராக விரும்பினால், நிலையான கேப்டன் இருக்க வேண்டியதன் அவசியத்தை ரோகித் புரிந்துகொண்டுள்ளார். கோலியுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால் அவரைச் சுற்றி அதிக பதட்டம் இருப்பதாகத் தெரியவில்லை" என குறிப்பிடுகின்றனர்.

சாதிப்பாரா ரோகித்?

ஒருவேளை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான அணி அசத்தினால், அவரே கேப்டனாக தொடரவும் வாய்ப்புள்ளது. அதோடு, தனது பேட்டிங் திறனையும் அவர் வலுப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தால், அது ரோகித்தின் கேப்டன்சி பதவிக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் அணியில் இடம்பெறுவதையே கேள்விக்குறியாக்கலாம். எனவே கோப்பையை வென்று அணியில் தனது இடத்தை ரோகித் தக்கவைப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த கேப்டன் யார்?

முன்னதாக, 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு விராட் கோலி தயாராகும் விதமாக 2017ம் ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே பாணியில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் தயாராகும் விதமாக, 2021ம் ஆண்டு கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போதும் உலகக் கோப்பைக்கு 2 ஆண்டுகளே உள்ள நிலையில், ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்புவதற்கு ஏற்ற அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இல்லாதது ஒரு பிரச்னையாக உள்ளது. துணை கேப்டனான சுப்மன் கில், வெறும் 50 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். நட்சத்திர வீரரான பும்ரா அடிக்கடி காயங்களை சந்திப்பது, அவருக்கான கேப்டன்சி வாய்ப்புகளை தடுக்கிறது. எனவே தொலைநோக்கு பார்வையோடு நீண்ட யோசனைக்கு பிறகே அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் பிசிசிஐ உள்ளது.

வீரர்களுக்கான ஒப்பந்தம்:

மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் A+ ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று BCCI-யின் கொள்கை பரிந்துரைத்துள்ளது. ஆனால், ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டானர். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் மோசமாக செயல்பட்டனர். இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதி கவனம் செலுத்தியுள்ளனர்.  அக்சர் படேல், KL ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் A வகைக்கு உயர்த்தப்படலாம். . கடந்த ஆண்டு ஒழுக்காற்று பிரச்சினைகள் காரணமாக நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஒப்பந்தத்தில் இடம்பெறலாம்.

Continues below advertisement