IND vs NZ Final: கால் நூற்றாண்டு பகை! 25 ஆண்டு கழித்து பழிதீர்க்குமா இந்தியா? 2000ல் நடந்தது என்ன?
IND vs NZ Final Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும் இந்திய அணி 25 ஆண்டுகள் பகையை தீர்க்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. 8 அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு குரூப் ஏ-வில் இடம்பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி
ஐசிசி தொடர்களில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்ததற்கு கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்தியா வீழ்த்தி பழிதீர்த்தது.
அதேபோல, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா 25 ஆண்டுகளாக தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது. 1998ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகமான மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது சீசனில் கோப்பையை யார் வெல்வது? என்பதற்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - இந்தியா மோதின.
2000ல் நடந்தது என்ன?
அந்த போட்டியில் இளம் வீரராக இருந்த கங்குலி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. சச்சின், ராகுல் டிராவிட், யுவராஜ்சிங், வினோத் காம்ப்ளி, ராபின் சிங், அஜித் அகர்கர், கும்ப்ளே, ஜாகீர் கான் என இளம் வீரர்களாக களமிறங்கினர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கங்குலி - சச்சின் ஆட்டத்தைத் தொடங்கினர்
பவர்ப்ளே, சூப்பர் ஓவர், ரிவியூ சிஸ்டம் என இன்றைய நவீன கிரிக்கெட்டின் எந்த விதிகளும் இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் சரிசமமான வாய்ப்பில் கிரிக்கெட் நடந்த காலம். அந்த போட்டியில் களமிறங்கியது முதலே கேப்டன் கங்குலி பந்துகளை பந்தாடினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த சச்சின் டெண்டுல்கரும் அபாரமாக ஆடினார்.
மிரட்டிய கங்குலி சதம்:
இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து கேப்டன் ப்ளெமிங் ஆலட், ஓ கார்னர், கிறிஸ் கெய்ன்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், நாதன் ஆஸ்லே, ஹாரிஸ் ஆகியோரை பயன்படுத்தினார். சச்சின் - கங்குலி இருவரும் அரைசதம் கடந்தனர். இந்திய அணி 141 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் அவுட்டானார். அவர் 69 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களிமிறங்கிய ராகுல் டிராவிட் கங்குலிக்கு ஒத்துழைப்பு தந்தார்.
சிறப்பாக ஆடிய கங்குலி சதம் விளாசினார். சற்று நேரத்தில் ராகுல் டிராவிட் 22 ரன்னில் அவுட்டாக, கங்குலி நாதன் ஆஸ்லே பந்தில் அவுட்டானார். 130 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 117 ரன்கள் எடுத்த நிலையில் கங்குலி அவுட்டானார். கங்குலி அவுட்டான பிறகு யுவராஜ் 18 ரன்னிலும், காம்ப்ளி 1 ரன்னிலும் அவுட்டாக, அகர்கர் 15 ரன்களை கடைசியில் அடிக்க இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எட்டியது.
265 ரன்கள் டார்கெட்:
2000ம் போன்ற காலகட்டத்தில் 265 ரன்கள் என்ற இலக்கு மிக மிக கடினமான ஒன்றாகும். இப்போது இருப்பது போல 300 ரன்களுக்கு மேல் எட்டிப்பிடிப்பது போல அப்போது இலக்கை நெருங்க முடியாது. அதுவும் 265 ரன்கள் இலக்கு என்பது மிகவும் சவாலான இலக்கு ஆகும். ஜாகிர்கான், வெங்கடேஷ் பிரசாத், அகர்கர், கும்ப்ளே ஆகிய பந்துவீச்சு பலத்தை நம்பி இந்தியா களமிறங்கியது.
ஆட்டத்தை இந்திய அணிக்கு ஆட்டம் சிறப்பாகவே தொடங்கியது. நியூசிலாந்து தொடக்க வீரர் ஸ்பியர்மேன் 3 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் பிரசாத் அபாரமாக பந்துவீச நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் ப்ளெமிங் 5 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் கும்ப்ளேவும் சுழல் தாக்குதலைத் தொடங்கினார். இதனால், நாதன் ஆஸ்லே - ரோஜர் ட்வோஸ் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. நாதன் ஆஸ்லே 48 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டாக, 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாற இந்திய ரசிகர்கள் வெற்றி நமக்கே என்று எண்ணினர்.
வில்லனாக வந்த கிறிஸ் கெயின்ஸ்:
ஆனால், இந்திய அணிக்கு வில்லனாக உள்ளே வந்தார் கிறிஸ் கெயின்ஸ். அவருக்கு ஒத்துழைப்பு தந்த ரோஜர் ட்வோஸ் 31 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த மெக்மில்லன் 15 ரன்னில் அவுட்டானார்.
132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்தாலும் அடுத்து வந்த கிறிஸ் ஹாரிசை மறுமுனையில் வைத்துக்கொண்டு கிறிஸ் கெயின்ஸ் தனி ஆளாக போராடினார். அவர் ஓரிரு ரன்களாக எடுத்துக்கொண்டு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினர். கும்ப்ளேவின் சுழலில் 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.
பறிபோன சாம்பியன்ஸ் டிராபி:
சிறப்பாக ஆடிய கிறிஸ் கெய்ன்ஸ் அரைசதம் கடந்தார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த கிறிஸ் ஹாரிசும் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி அணியின் ரன்ரேட்டுக்கு ஒத்துழைப்பு தந்தார். இதனால், ஆட்டம் மெல்ல மெல்ல நியூசிலாந்து பக்கம் சென்றது.
இதனால், 10 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. வெற்றிக்கு 10 ரன்களே தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடிய கிறிஸ் ஹாரிஸ் 46 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய கிறிஸ் கெயின்ஸ் சதம் விளாசினார். பரப்பான சூழலில், கடைசி ஓவரை அஜித் அகர்கர் வீசினார். 3 பந்துகளில் 1 ரன்கள் தேவை என்ற நிலையில், கிறிஸ் கெயின்ஸ் ஒரு ரன் எடுத்து வெற்றி பெற வைத்தார்.
25 ஆண்டுகள் பகை:
102 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாத கிறிஸ் கெயின்ஸ் இந்தியாவின் சாம்பியன் டிராபியை அன்று பறித்தார். மேலும், கங்குலியின் சதத்திற்கும் பலன் இல்லாமல் செய்தார். கடினமான இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்த கிறிஸ் கெயின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின்பு, இந்தியா 2 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தாலும் ஒரு முறை கூட இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவில்லை.
இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி பழிதீர்க்க இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்று நைரோபியில் அடைந்த தோல்விக்கு வரும் 9ம் தேதி துபாயில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.