Champions Trophy 2025 IND Vs AUS Semi Final: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள், துபாய் சர்வதேச மைதானத்தில் மோத உள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி, ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், பி பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த ஆஸ்திரேலியா அணியும் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் மோத உள்ளன. இந்த போட்டியில் மொத்தமாக பழிவாங்குமா இந்தியா? ஆஸ்திரேலியாவை ஓடவிடுமா ரோகித் படை? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதல்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தொலைக்காட்சிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஸ்போர்ட்ஸ்18 தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
பெரும் எதிர்பார்ப்பு:
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக வீழ்ந்த பிறகு, இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஐசிசி நாக் அவுட் போட்டி இதுவாகும். சாதனைகளைப் பார்க்கும்போது, ஐசிசி நிகழ்வுகள் முழுவதும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 2010 முதல் நடைபெற்ற நாக் அவுட் போட்டிகளில், நான்கு போட்டிகளில் இந்தியா ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அந்த அனைத்து காயங்களுக்கும் இந்தியா இன்று பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்திய அணியின் பலம், பலவீனம்:
தொடர்ந்து நான்காவது போட்டியையும் இந்திய அணி துபாய் மைதானத்திலேயே விளையாடுகிறது. இதனால் மைதானத்தின் சூழலை ரோகித் படை நன்கு உணர்ந்து இருப்பது அணிக்கு சாதகமாக உள்ளது. அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களின் பங்களிப்புடன் வெற்றியை உறுதி செய்து வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களின் பேட்டிங்கை சார்ந்தே இன்று இந்தியாவின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.
அதேநேரம், பந்துவீச்சில் ஷமி, ராணா, அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர். கடைசி போட்டியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணிக்கு நிகராக ஆஸ்திரேலியா உள்ளதால், இன்று ரோகித் படை வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
இந்தியா - ஆஸ்திரேலியா: நேருக்கு நேர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 151 முறை மோதியுள்ளன. அதில், இந்தியா 57 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 84 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகள் முடிவு எட்டப்படவில்லை.
துபாய் மைதானம் எப்படி?
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மெதுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தில் சிரமப்படுவார்கள், அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 219 ரன்கள் மட்டுமே. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களுக்கு மேல் எடுத்தால், எதிரணிக்கு அது மிகவும் சவாலான ஸ்கோராக இருக்கும். நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் கடைசி போட்டியும் இதற்கு சான்று.
அதேநேரத்தில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளை விட சேஸிங் செய்யும் அணிகள் சிறந்த சாதனையைப் பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் நடைபெற்ற 61 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 23 ஆட்டங்களிலும், சேஸ் செய்யும் அணிகள் 36 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
துபாயில் மழை வருமா?
துபாயில் இன்று தெளிவான வானத்தையும் சூரிய ஒளியையும் வானிலை எச்சரிக்கை உறுதியளிக்கிறது. வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படாது என நம்பப்படுகிறது.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கீ.), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி
ஆஸ்திரேலியா: ஜோஷ் இங்கிலிஸ் (wk), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (c), மார்னஸ் லபுசக்னே, கூப்பர் கோனொலி, அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா