தமிழ்நாடு உள்பட உலகின் தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், எல்.டி.டி.இ. அமைப்பின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறி இளம்பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபாகரன் மகள் வீடியோ:
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவில் இருப்பது பிரபாகரனின் மகள் துவாரகா என்றும், சிலர் இது துவாரகா இல்லை என்றும், சிலர் இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வீடியோ குறித்து இன்று காலை வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நிருபர்கள் பிரபாகரன் மகள் பேசும் வீடியோ மாலை வெளியாக உள்ளதாகவும், அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
தோன்றினால் மகிழ்ச்சி:
அதற்கு திருமாவளவன் பதிலளித்து கூறியதாவது, இப்படிப்பட்ட தகவல்களில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி அவர் வெளிப்படையாக தோன்றினால் நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் வெளிவருவது வேதனை அளிக்கிறது. இன்று மாவீரர் நாள். மேதகு பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் உரையாற்றுவார். உலக நாடுகள் அவர் என்ன சொல்கிறார் என்பதை எதிர்நோக்கி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நம்பிக்கையே இல்லை:
மேலும், அவரிடம் பிரபாகரன் மனைவி, மகள் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் இயக்குனர் கவுதமனிடம் பேசி அதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த திருமாவளவன் எனக்கு அதில் நம்பிக்கையே இல்லை. அவர்கள் உயிரோடு இருந்தால் அது மகிழ்ச்சிக்குரியது. அவர்கள் வௌிச்சத்திற்கு வரும்போது அதை ஏற்போம். இப்போது துளியளவில் கூட நம்பிக்கை இல்லை என்று கூறினார்.
பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு..
மேலும் படிக்க: TN Rain Alert: சீக்கிரமா வீட்டுக்குப் போங்க.. மழை கொட்டித் தீர்க்கப்போகுது; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?