Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Rohit Sharma: இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று தந்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
Rohit Sharma: சுமார் ஒரு மாத காலமாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் நிறைவு பெற்றுள்ளது. பெரும்பாலோனார் எதிர்பார்த்தது போல இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி இந்த கோப்பையை இந்தியா வென்றது.
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த ரோகித்:
நேற்றைய போட்டியின் முடிவில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இதுபோன்று தொடர்ந்து தகவல் வெளியானதால் இந்திய ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், தான் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் எங்கும் செல்லப்போவதில்லை என்றும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆடுவேன் என்றும் அவர் கூறினார். இது ரோகித் சர்மா மட்டுமின்றி இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மாவின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, இந்திய கிரிக்கெட் அணிக்காக ஐசிசி நடத்தும் தொடர்களில் 50 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக தோனி உள்ளார்.
இந்த பயணம் தொடருவது ஏன்?
இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் உள்ளார். ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணியை வழிநடத்தியவர் ரோகித் சர்மா.
தோனியைப் போலவே மிகச்சிறந்த கேப்டனாக திகழ்பவர் ரோகித் சர்மா. ஐபிஎல் தொடர்களிலும் தோனியைப் போல 5 கோப்பைகளை மும்பைக்கு வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா. 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது ரோகித் சர்மாவின் மனதில் ஆறாத ரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. அதன் எதிரொலியாகவே அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார்.
உலகக்கோப்பை கனவு:
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணிக்கு அழைத்துச் சென்ற பெருமையும் ரோகித் சர்மாவிற்கு உண்டு. இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவிற்கு இந்திய அணிக்காக 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று தர வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக உள்ளது.
இந்த கனவை அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பையில் நிறைவேற்ற அவர் முனைப்புடன் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்றும், வதந்தியை பரப்பாதீர்கள் என்றும் கூறியிருப்பதாக கருதப்படுகிறது.
2027ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை நடக்க உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வதே தனது லட்சியமாக கொண்டுள்ளார். தற்போது 37 வயதான ரோகித் சர்மா 272 ஒருநாள் போட்டிகளில் 32 சதங்கள், 3 இரட்டை சதங்கள், 57 அரைசதங்கள் உள்பட 11 ஆயிரத்து 92 ரன்கள் எடுத்துள்ளார். 2027ம் ஆண்டு உலகக்கோப்பையில் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.