IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?

IND Vs NZ CT 2025: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

IND Vs NZ CT 2025: நியூசிலாந்து அணியை ரோகித் தலைமையிலான இந்திய அணி பழிவங்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Continues below advertisement

இந்தியா - நியூசிலாந்து மோதல்:

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும் இரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ள லீக் போட்டி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் நடைபெற உள்ள போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவின் கனவுகளை சிதைக்கும் நியூசிலாந்து:

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பரம எதிரி என்றாலே பாகிஸ்தான் தான் என கூறப்படும். ஆனால், அண்மைக்காலமாக அந்த நிலை மாறி வருகிறது. பல முக்கிய போட்டிகளில் நெருக்கடி கொடுத்து, இந்திய ரசிகர்களின் கனவை கலைக்கும் பணியை நியூசிலாந்து செய்து வருகிறது. உதாரணமாக 2019ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி,140 கோடி இந்திய ரசிகர்களை கண்கலங்க செய்த பெருமை நியூசிலாந்தையே சேரும். அதைதொடர்ந்து, 2021ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ரோகித்தின் ஆறாத வடு:

இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. எதிர்பாராத அந்த மிகப்பெரும் தோல்வியால் இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையே இழந்தது. அதோடு, ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இது அவரது கிரிக்கெட் பயணத்தில் ஆறாத வடுவாகவும் மாறியுள்ளது.

ஆஸ்திரேலியா பாணியில் பழிவாங்குவாரா ரோகித்?

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில், ரோகித் சர்மா தலைமயிலான இந்திய அணி தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியா அணி அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இது இந்திய அணியை கடுமையாக பாதித்தது. அந்த சூழலில் தான், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், கட்டாய வெற்றி வேண்டிய சூழலில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எதிர்கொண்டது. அந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, 41 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். குறிப்பாக  உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்ககின் ஒரு ஓவரில் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். அதுகுறித்து பேசிய ஸ்டார்க், முதல் பந்து வீசியது மட்டுமே எனக்கு தெரியும், அதற்கு பிறகு ரோகித் சர்மா என்னை முற்றிலுமாக ஆக்கிரமித்துவிட்டார் என கூறி சிலாகித்தார்.

அதன் மூலம், உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தார். அதேபாணியில், நியூசிலாந்திற்கு எதிராக உள்ளூரில் டெஸ்ட் தொடரை முற்றிலுமாக இழந்த, முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு நாளைய போட்டி மூலம் ரோகித் சர்மா பழிவாங்குவாரா? என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Continues below advertisement