Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது.

Continues below advertisement

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் மழை குறுக்கிட்டிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழத்தியது.

Continues below advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் குரூப் ஏ பிரிவில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள்  தகுதிப்பெற்றன. ஆனால், குரூப் பி பிரிவில் இன்னும் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது இன்னும் தெளிவாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைப்பெற்ற முக்கியப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ், டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து, ஜோடி சேர்ந்த ஸத்ரான், அடல் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், 22 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாம்பா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஸத்ரான். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்த போதிலும் அடல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 85 ரன்கள் எடுத்திருந்தபோது அடல் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோதிலும், ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.

இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். 20 ரன்கள் எடுத்திருந்தபோது ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷார்ட் ஆட்டம் இழந்தார். 

இதையடுத்து, கேப்டன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறடித்தார். இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோதுதான் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாகியும் மழை நிற்காத காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. 

Continues below advertisement