சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான T20I தொடரில் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார்.


தேர்வுக்குழுவும் சஞ்சு சாம்சனும்


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு மீது விமர்சனங்கள் இருந்து வருகிறது. சமீப காலங்களில் அது அதிகரித்தது. சர்ச்சைக்குள்ளான முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவின் ஸ்டிங் ஆபரேஷனில் கூட அவர் இது குறித்து பேசி இருந்தார். சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாமல் விட்டால் அடுத்த நாள் சமூக வலைதளங்களில் எங்களை திட்டப் போகும் வார்த்தைகள் எல்லாம் கண் முன்னே வந்து செல்லும், அது ஒரு பெரிய அழுத்தம் என்று கூறி இருந்தார். அந்த அளவுக்கு சஞ்சு சாம்சனை ஒரு 'நிகழ மறுக்கும் அற்புதம்', 'அண்டர்ரேட்டட்', 'அன்சங் ஹீரோ' என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பதிய வைத்திருந்தனர். ஆனால் தற்போது கொடுக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் பலவற்றில் அவர் சொதப்பிவருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் வீரர் கனேரியாவும் பேசி உள்ளார். 



இனி அது சஞ்சு சாம்சனின் தவறுதான்


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சாம்சன் 51 ரன்கள் குவித்தார். ஆனால் அதன் பின்னர் அவரது ஃபார்ம் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் சரிந்தது வந்தது. அவர் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது குறித்து பேசிய கனேரியா "சொல்லுவதற்கு மன்னிக்கவும், இந்த தொடரில் சஞ்சுவுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுத்தார்கள், ஆனால் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இது அவரது சொந்த தவறு. தேர்வாளர்களையோ அல்லது வேறு யாரையும் குறை சொல்லக்கூடாது. இது முற்றிலும் அவரது தவறு. மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால், சஞ்சு சாம்சன் அவரை அவரே குற்றம் சொல்லிக்கொள்ள வேண்டும்" என்று கனேரியா தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்: World Cup 2023: உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது? ஐசிசி கொடுத்த அதிரடி அப்டேட்!


முகேஷ் குமார் தேவையில்லை


கனேரியா மேலும் இந்திய அணியின் தீவுகள் பற்றி பேசினார். குறிப்பாக முகேஷ் குமார் தொடர்பான அவர்களின் முடிவை கேள்விக்குட்படுத்தினார். "ஹர்திக் பாண்டியா இருக்கும்போது, முகேஷ் குமார் அணிக்கு தேவை இல்லை. ஏனெனில் இருவரும் ஒரே மாதிரியான வேகம் கொண்டவர்கள். உம்ரான் மாலிக் மிக வேகமாக பந்து வீசுகிறார், ஆனால் அவர் கொஞ்சம் கான்ஃபிடன்ஸ் குறைவாக இருக்கிறார். உம்ரானை இந்தியா அனைத்து போட்டிகளிலும் விளையாட முயற்சித்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த தொடர் அவரது நம்பிக்கையை அதிகரித்திருக்கும்." என்று கூறினார்.



உம்ரானை தேற்றி இருக்கலாம்


முகேஷ் குமார் சமீபத்தில் ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவங்களிலும் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார். இந்த நிலையில், உம்ரான் மாலிக்கின் திறனை மேம்படுத்த இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கனேரியா வாதிட்டார், அதன் மூலம் அவரது வேகத்தை, சரியான வழிகாட்டுதலுடன் நேர்த்தி செய்து நல்ல பந்துவீச்சாளராக உருவாக்கி இருக்க முடியும் என்று கருதுகிறார். இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த தொடருக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.