சுனில் நரைன் உடனான நட்பு குறித்து பகிர்ந்துள்ளார் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கம்பீர்.

மூன்றாவது முறையாக சாம்பியன்:


நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் 17-ல் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2012, 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகள் கோப்பையை வென்றதன் மூலம் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையை கொல்கத்தா பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் விளையாடி வரும் சுனில் நரைன்.


மதிப்புமிக்க வீரர்:


இச்சூழலில் தான் கொல்கத்தா அணியின் மதிப்புமிக்க வீரர் என்ற விருதை 3வது முறையாக சுனில் நரைன் கைப்பற்றினார். கடந்த சீசன்களில் சிறப்பான பங்களிப்பை கொல்கத்தா அணிக்காக வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் இந்த சீசனிலும் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் ஜொலித்தார் என்றே சொல்ல வேண்டும்.


அதாவது, இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய அவர் 368 ரன்களை குவித்தார். அதேபோல் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். 


இந்நிலையில் சுனில் நரைன் உடனான நட்பு குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீர் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஐபிஎல் தொடரின் எம்விபி ( Most Valuable Player) விருதை பெறவில்லை என்றாலும் கே.கே.ஆர் அணியின் எம்விபி வீரர் சுனில் நரைன் தான். அவரின் ஆல்ரவுண்டர் திறமையை இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் பார்ப்போம். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் தனது திறமை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளார்” என்று கூறினார்.


எனது காதலியை அழைத்து வரலாமா?


தொடர்ந்து பேசிய அவர், “இன்னும் அவரிடம் இருந்து கேகேஆர் அணிக்கு கொடுப்பதற்கு ஏராளம் உண்டு. முதல்முறையாக 2012ஆம் ஆண்டு தான் சுனில் நரைன் கேகேஆர் அணிக்குள் வந்தார். ஜெய்ப்பூரில் நாங்கள் அனைவரும் பயிற்சியில் இருந்தோம். அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் மதிய உணவை சாப்பிட முடிவு செய்தேன். அப்போது சுனில் நரைனையும் வருமாறு அழைப்பு விடுத்தேன். நாங்கள் இருவரும் அங்கு ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.


ஆனால் அவர் பேசிய முதல் வார்த்தை என்ன தெரியுமா? ஐபிஎல் தொடரை பார்க்க எனது காதலியை அழைத்து வரலாமா? என்று தான் கேட்டார்.


அப்போது முதல் இப்போது வரை நாங்கள் இருவரும் சகோதரர்கள் போல் தான் இருக்கிறோம். எந்த நேரத்தில் என்ன பிரச்சனையாக இருந்தாலும், ஒரேயொரு போன் கால் போதும். அவருக்கு துணையாக நானும், எனக்கு துணையாக அவரும் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: அகில இந்திய ஹாக்கி போட்டி: இந்தியன் பேங்க் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய போபால்


மேலும் படிக்க: Fastest 100 Wickets: அதிவேகமாக 100 விக்கெட்டுகள்! 21 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீராங்கனை!