டி20 உலகக் கோப்பை:


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது ஐசிசி டி20 உலகக் கோப்பை. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தான் இந்த டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது.


முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை , நேபாளம் உள்ளிட்ட 20 நாடுகள் இந்த முறை ஐசிசி 20 உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளன. அதன்படி இந்தியா கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே அமெரிக்காவிற்கு சென்று விட்டனர். அவர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


விசா மறுப்பு:


இந்நிலையில் தான் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவிற்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா நேர்காணலில் லமிச்சன் கலந்து கொண்டார். டி20 உலகக் கோப்பைக்காக அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதற்கு உதவி கோரி, விளையாட்டு அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில் வெளியுறவு அமைச்சகம் (MoFA) அனுப்பிய  குறிப்பைத் தொடர்ந்து அவரது விசா நேர்காணல் இன்று திட்டமிடப்பட்டது.


இச்சூழலில் தான் அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளது அமெரிக்க தூதரகம். அமெரிக்கா விசா வழங்க மறுத்ததை தொடர்ந்து சந்தீப் லாமிச்சானேவின் ரசிகர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான போராட்டங்களை காத்மண்டுவில் உள்ள ஒரு சில இடங்களில் மேற்கொண்டனர்.


பாலியல் வழக்கு:


இவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து 18 வயது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.


அப்போது, சந்தீப் லாமிச்சானே கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர், சந்தீப் லாமிச்சானே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப் லாமிச்சானே வங்கிக் கணக்கு சீல் வைக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.


இதனிடையே நேபாள மாவட்ட நீதிமன்றம் இவரை குற்றவாளி என்று அறிவித்து சிறைத் தண்டனை விதித்த நிலையில்  படான் உயர்நீதிமன்ற கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தீப்பை குற்றவாளி இல்லை என்று கூறி இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனாலும் அவர் பாலியல் வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டதால் அவருக்கு விசா வழங்க மறுத்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒரு வேலை சந்தீப் லாமிச்சானேவிற்கு விசா வழங்க முழுவதும் மறுக்கும் பட்சத்தில் இவர் டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.