எதிர்கால நட்சத்திரமாக உருவெடுக்கும் சுப்மன் கில்:


சச்சின், ஷேவாக், கங்குலி மற்றும் டிராவிட் என பல உலகத்தரம் வாய்ந்த பல பேட்ஸ்மேன்களை இந்திய அணி கண்டுள்ளது, அவர்களின் இடத்தை தற்போது, கோலி மற்றும் ரோகித் சர்மா  ஆகியோர் நிரப்பி வருகின்றனர். இருவரும் 33 வயதை கடந்துள்ள நிலையில், விரைவில் அவர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் ஏற்பட உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்படுகிறார் வெறும் 23 வயதே ஆன, சுப்மன் கில்.


நேர்த்தியான டெக்ஸ்ட் புக் ஷாட்ஸ்:


பஞ்சாபை சேர்ந்த இளம் வீரம், களம் காணும் போதெல்லாம் ரசிகர்களின் மைதானத்தில் விருந்து படைக்கிறார். பொதுவாக கிரிக்கெட்டில் உள்ள அனைத்து தரப்பினராலும் ஆடக்கூடிய ஷாட்களை டெக்ஸ்ட் புக் ஷாட் என அழைப்பர். அவற்றை மிகவும் நேர்த்தியாகவும், துல்லியமாகவும் ஆடுவது என்பது அனைவராலும் முடியாது. ஆனால், அந்த ஷாட்களை சுப்மன் கில் அநாயசமாக விளையாடி வருகிறார். நல்ல ஃபுட் ஸ்டெப்களை கொண்டிருப்பதோடு,  கன்சிஸ்டன்சியாக அதாவது தொடர்ந்து ரன்களை குவித்து வருவதும், ரசிகர்கள் புருவங்களை உயர்த்தி சுப்மன் கில்லை ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கிறது.


கவனம் ஈர்த்த சுப்மன் கில்:


கே. எல். ராகுல் மற்றும் தவான் ஆகியோரின் இருப்பால், சுப்மன் கில்லின் வாய்ப்பு இந்திய அணியில் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், ஆச்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை தொடருக்குப் பின், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக்ககோப்பை தொடருக்கு, இந்திய அணியை தயார்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வான இளம் வீரர்களில்,  சுப்மன் கில் அதிக கவனம் ஈர்த்துள்ளார். அவரால் சூழலை உணர்ந்து தேவைப்பட்டால் அதிரடியாக ஆடி ரன் குவிக்கவும் முடிகிறது, ஒருவேளை அணி சரிவை சந்தித்தால் நிதானமாக ஆடி அணியை கரை சேர்க்கவும் முடிகிறது என்பது, சுப்மன் கில்லின் பலமாக உள்ளது.  


தொடரும் ரன் வேட்டை:


அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய சுப்மன் கில், ஒரு போட்டியில் 45 ரன்களையும், மற்றொரு போட்டியில் அரைசதமும் விளாசினார். அதைதொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள்கொண்ட டி-தொடரில், சற்றும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.  ஆனால், ஒருநாள் தொடரின் போது, 70, 21 மற்றும் 116 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதைதொடர்ந்து நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை ஆழ்த்தினார். முதல் போட்டியிலேயே 208 ரன்களை விளாசியதோடு, அடுத்த இரண்டு போட்டிகளிலும் முறையே 40 மற்றும் 112 ரன்களை சேர்த்தார். அதைதொடர்ந்து, டி-20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியின் போது அபாரமாக ஆடி, டி-20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.


மூன்று மாதங்களில் அபாரம்:


கடந்த 3 மாதங்களில் மட்டும் டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சேர்த்து, 2 அரைசதங்கள், 3 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதத்தை சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் பதிவு செய்துள்ளார். இளம் வயதில் 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும், சுப்மன் கில் படைத்துள்ளார். அடுத்தடுத்த சாதனைகள் மூலம்  நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், சுப்மன் கில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். அதோடு, இந்திய அணியில் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கவனம் பெற்றுள்ளர். ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டுள்ள கில், எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தவும் வாய்ப்புள்ளது.


சுப்மன் கில்லை பாராட்டிய கோலி:


நியூசிலாந்து அணிக்கு எதிரான சதத்தை தொடர்ந்து, சுப்மன் கில்லை பாராட்டி விராட் கோலி சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், அவர்கள் இருவரும் இருப்பது போன்ற புகைப்படத்துடன், எதிர்காலத்திற்கான நட்சத்திரம் இங்கு இருக்கிறார் என சுப்மன் கில்லை பராட்டியுள்ளார்.