கார் விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களில் ஒருவரான பஸ் நடத்துநர் பரம்ஜீத் பேட்டியளித்துள்ளார். ரிஷப் பண்ட்டை நாங்கள் வெளியே இழுத்ததும் 5 முதல் 7 விநாடிகளில் கார் தீப்பிடித்து எரிந்தது. நாங்கள் விசாரித்தபிறகே காரிலிருந்து மீட்கப்பட்டவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் என தெரிந்தது” என தெரிவித்தார். 



ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் ஊழியர்களுக்கு பாராட்டு:


ஹரியானாவில் ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் ஊழியர்களை பானிப்பட் போக்குவரத்துகழகம் பாராட்டி கவுரப்படுத்தியது. 


பண்ட் உடனான இந்த பயங்கர விபத்துக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் பல வதந்திகளில் பரவியது, சாலை விபத்தின்போது கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் உடைமைகள் அனைத்தும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்திகள் பரவியது. இந்தநிலையில், இந்த தகவல்களை ஹரித்வார் காவல்துறையினர் தற்போது மறுத்துள்ளனர். ரிஷப் பண்ட்டின் சில உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சில சேனல்கள் மற்றும் இணையதளங்களில் கூறப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கை முற்றிலும் தவறானது என்றும் எஸ்.எஸ்.பி அஜய் சிங் விளக்கமளித்துள்ளார். 


அதில், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காவல் துறையினர் விரைந்து சென்று விட்டனர். அந்த இடத்தில் காவல்துறையினர் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் சொன்னதன் அடிப்படையில் அப்படி எந்த்வொரு சம்பவம் நடக்கவில்லை. மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சையின்போது, ரிஷப் பண்ட் சூட்கேஸ் தவிர, காருடன் சேர்ந்து தனது அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானதாக கூறினார். ஹரித்வார் காவல்துறையினர் அந்த சூட்கேஸ் மற்றும் அந்த இடத்தில் பெறப்பட்ட பணம், செயின் ஆகியவற்றை ரிஷப் பண்ட் தாயாரிடம் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். 


காப்பாற்றிய பஸ் டிரைவர் மற்றும் நடத்துநர்:


ஹரியானா ரோட்வேஸிம் பேருந்து ஓட்டுநரான சுஷில் குமார் என்பவர்தான் ரிஷப் பண்ட்டை முதலில் பார்த்தார். அந்த நபர்தான் பண்ட்டை காரில் இருந்து இறக்கி ஆம்புலஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பினார். பண்ட் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் என்று அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். 


பிசிசிஐ அறிக்கை:


முன்னதாக, விபத்தில் ரிஷப் பண்டின் தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும், அதேநேரம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்தின் சிசிடிவி காட்சிகள்:


இதற்கு மத்தியில், அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வேகமாக சென்ற கார் டிவைடரில் சிக்கியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாயாருக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காகவும் புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.


ரிஷப் பண்ட் வாக்குமூலம்:


தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் முழித்த ரிஷப் பண்ட், இந்த விபத்து எப்படி நடந்தது என்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ”நான் தான் காரை ஓட்டி வந்தேன். வாகனம் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக கண் அசந்துவிட்டேன். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.