சச்சின், தோனி, ரோகித், விராட்கோலி போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக  இருப்பவர்தான் லாலா அமர்நாத்.


இந்திய கிரிக்கெட் அணிக்காக முதன்முதலாக டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தவர், இந்திய கிரிக்கெட் அணிக்காக முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்ப்றிய லாலா அமர்நாத்திற்கு இன்று 88வது பிறந்தநாள். பிரிட்டிஷ் இந்தியாவில் 1911ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பஞ்சாபில் பிறந்தவர்தான் லாலா அமர்நாத்.




அப்போது, இந்தியாவுடன் ஒன்றாக இருந்த லாகூரில் உள்ள கிரிக்கெட் கிளப்பில் அமர்நாத் தன்னுடைய சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது திறமையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்ராங்க் டேரண்ட் என்பவர் பார்த்துள்ளார். இவர்தான் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவில் ஆடி வந்த மகாராஜா அணிக்கு பயிற்சியாளர். அவர் அமர்நாத்திற்கு மகாராஜா அணியில் ஆட வாய்ப்பு அளித்தார்.


 


அப்போதைய பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங், மகாராஜா அணிக்காக ஏராளமான வெளிநாட்டு வீரர்களை கிரிக்கெட் ஆட அழைத்து வந்துள்ளார். அப்போது, வெளிநாட்டு வீரர்கள் வலைப்பயிற்சியில் தங்களது கால்களை எவ்வாறு நகர்த்துகின்றனர் என்பதை லாலா அமர்நாத் உன்னிப்பாக பார்த்து கால் நகர்வுகளை கற்றுக்கொண்டுள்ளார்.  


அமர்நாத்தின் அபார திறமைக்கு பரிசாக அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதுவும், அப்போது கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக வலம் வந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் வாய்ப்பு கிட்டியது. 1933ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அமர்நாத் அறிமுகமானார். அந்த போட்டி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அமர்நாத்தின் பெயரை என்றென்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கும் என்பதை யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.


மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 219 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 438 ரன்களை குவித்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அமர்நாத்- நாயுடு ஜோடி சேர்ந்தனர், இருவரும் இணைந்து 3வது விக்கெட்டிற்கு 186 ரன்களை குவித்தனர். நாயுடு 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.




நாயுடு ஆட்டமிழந்த பிறகு விக்கெட்டுகள் விழுந்தாலும், தனி ஆளாக போராடிய அமர்நாத் மட்டும் சதமடித்தார். இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் அடிக்கப்பட்ட முதல் சதம் அதுவே ஆகும். அவர் 21 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் இந்திய அணி 258 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைவதை அமர்நாத் சதத்தால் இந்தியா தவிர்த்தது.


இந்திய அணி இரண்டாவது உலகப்போர் சமயத்தால் அதிகாரப்பூர்வமாக எந்த போட்டிகளிலும் ஆடாத சூழலில், அமர்ந்தாத் முதல் தர போட்டிகளில் பட்டையை கிளப்பினார். முதல் தர போட்டிகளில் மட்டும் 10 ஆயிரம் ரன்களை விளாசினார். 1947- 48ம் ஆண்டு ஆஸ்திரேலிய சென்ற இந்திய அணிக்காக அமர்நாத் பேட்டிங்கில் மிரட்டினார். அந்த தொடரில் மட்டும் அமர்நாத் 1162 ரன்களை விளாசினார். அதில் 144 ரன்கள், 171 ரன்கள் மட்டும் ஆட்டமிழக்காமல் 228 ரன்கள் விளாசியதும் அடங்கும். அதுவும் அமர்நாத் அடித்த இரட்டை சதம் இந்திய அணி 0 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது வந்த சதம் ஆகும். ஆனால், அந்த தொடர் அதிகாரப்பூர்வ டெஸ்ட் தொடராக கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதுதான் சோகமான விஷயம் ஆகும்.


1952ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியபோது, அமர்நாத் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்திய அணி அந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்று அசத்தியது.


இந்திய அணிக்காக முதல் சதம், முதல் டெஸ்ட் தொடர் வெற்றி போன்ற பெருமைகளைப் பெற்றுத்தந்த அமர்நாத் 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 4 அரைசதங்களுடன் 878 ரன்கள் எடுத்துள்ளார். 186 முதல் தர போட்டிகளில் ஆடி 31 சதம், 39 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 426 ரன்களை குவித்துள்ளார். இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் 45 விக்கெட்டுகளையும், முதல்தர கிரிக்கெட்டில் 463 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.




இந்திய அணிக்காக முதல் உலககோப்பையை வென்றுத் தந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் பல சாதனைகளைப் படைத்த லாலா அமர்நாத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. லாலா அமர்நாத் இந்திய அணிக்காக பயிற்சியாளர், தேர்வுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் கடந்த 2000ம் ஆண்டு உயிரிழந்தார்.