இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி தற்போது வரை 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 250வது விக்கெட்டுகளை கடந்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2500 ரன்கள் 250 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனைையையும் படைத்துள்ளார். 


டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று காலை தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. இந்த போட்டியில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய வார்னர் – கவாஜா ஜோடியை முகமது ஷமி பிரித்தார்.




இந்திய அணி நாக்பூர் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அஸ்வின் – ஜடேஜா கூட்டணி இந்த போட்டியிலும் தங்களது சுழல் சாம்ராஜ்யத்தை தொடர்ந்தனர். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 249 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜடேஜா, இந்த போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி தந்து கொண்டிருந்த உஸ்மான் கவாஜாவை 81 ரன்களில் அவுட்டாக்கினார்.


இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது இந்தியர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்தார். பின்னர், ஜடேஜா சுழலில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 33 ரன்களிலும், மர்ஃபி டக் அவுட்டாகியும் வெளியேறினர்.




34 வயதான ஜடேஜா 62 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 252 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஜடேஜா தான் எப்போதுமே இந்திய அணியின் நம்பிக்கையான சொத்து என்பதை நிரூபித்துள்ளார். ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சு ஒரு இன்னிங்சில் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகும். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக 154 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆகும்.


டெஸ்ட் போட்டியில் 2593 ரன்களையும் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். ஆல்ரவுண்டர் தரவரிசையில் நம்பர் 1 வீரராக விளங்கும் ஜடேஜா 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 13 அரைசதங்களுடன் 2447 ரன்களை குவித்துள்ளார். 64 டி20 போட்டிகளில் ஆடி 457 ரன்களை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிகளில் 189 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை வகித்துள்ள ஜடேஜா, 132 விக்கெட்டுகளையும், 2502 ரன்களையும் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: Watch Video: இந்திய வீரர்களை பார்க்க ஆர்வத்தில் நுழைந்த ரசிகர்.. தரதரவென இழுத்துத்தாக்கிய பாதுகாப்பு வீரர்கள்!


மேலும் படிக்க: 100வது டெஸ்டில் அடியெடுத்து வைத்த 13வது இந்திய வீரர்..கவாஸ்கரிடம் சிறப்பு தொப்பியை பெற்ற புஜாரா..!