Ashwin Test Wickets: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி, 17) தொடங்கியது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன் படி பந்து வீச தொடங்கிய இந்திய அணிக்கு அந்த அளவுக்கு பந்து வீச்சு கைக்கொடுக்கவில்லை என்றே கூறலாம். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய அணியின் பந்துவீச்சளார்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி, ஆட்டத்தினை இந்தியா பக்கம் கொண்டு வந்தது.


இந்த போட்டியில் இதுவரை அதாவது மதியம் 3.00 மணி வரை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து இருந்தது. இதில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் மட்டும் 100 விக்கெடுகள் எடுத்து அசத்தி உள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் அனில் கும்ப்ளே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 111 டெஸ்ட் விக்கெட்டிகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அஸ்வினின் சாதனை பயணம்


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினாலே சாதனை தான் எனும் வகையில் அவரது செயல்பாடு உள்ளது. அந்த வகையில், இதற்கு முன்னர் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு  சிம்ம சொப்பனமாக விளங்கியது மட்டுமில்லாமல்  பல்வேறு புதிய சாதனைகளை படைத்து இருந்தார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதோடு, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 


31வது 5-விக்கெட்:


இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம், 31வது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தி அதகளப்படுத்தியுள்ளார் . இதன் மூலம் டெஸ்ட்  போட்டியில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த பட்டியலில் அஸ்வின் 7வது இடத்தில் உள்ளார்.  67 முறை 5 விக்கெட்ஸ் எடுத்து இலங்கையின் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, tஎஸ்ட் போட்டியில் இந்தியாவில் அதிக முறை அதாவது 25 முறை 5 விக்கெட் எடுத்த வீரர் என்ற  இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை, அஸ்வின் சமன் செய்தார்.  28 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனில் கும்ப்ளே செய்த சாதனையை, வெறும் 11 ஆண்டுகளிலேயே அஸ்வின் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இடது கை பேட்ஸ்மேன்களின் பயம்:


டெஸ்ட் வரலாற்றில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறார் இந்திய வீரர் அஸ்வின். இதுவரை 166 இன்னிங்ஸில் பந்துவீசியுள்ள அஸ்வின், 230 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமைக்கு அஸ்வின் சொந்தக்காரராகியுள்ளார்.    இந்த பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த ஆண்டர்சன் 314 இன்னிங்ஸில் விளையாடி 209 விக்கெட்டுகளுடனும், பிராட் 276 இன்னிங்ஸில் விளையாடி 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


முதல் இந்தியர்:


முதல் டெஸ்ட்  போட்டியின் முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டை கைப்பற்றியபோது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.  மேலும், சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்தியர் மற்றும் 3வது சர்வதேச வீரர் என்ற சாதனைக்கும் அஸ்வின் சொந்தக்காரராகியுள்ளார்.