வார்னர் கனவை சிதைத்த மிட்செல் ஓவன்! பிக்பாஷ் மகுடத்தை சூடியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்!
பிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடரில் வார்னர் தலைமையிலான சிட்னி அணியை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 தொடர் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பிக்பாஷ் லீக் கிரிக்கெட் திருவிழா இன்று நிறைவடைந்தது.
பிக்பாஷ் இறுதிப்போட்டி:
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதியது. வார்னர் தலைமையிலான சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. சிட்னி அணிக்காக களமிறங்கிய ஜேசன் சங்கா அதிரடி காட்டினார். கேப்டன் வார்னரும் பவுண்டரிகளாக விளாசினார்.
183 ரன்கள் டார்கெட்:
10 ஓவர்களில் 90 ரன்களை கடந்த சிட்னி அணி 10.2 ஓவர்களில் 97 ரன்களை எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் வார்னர் 48 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மேத்யூ கில்க்ஸ் டக் அவுட்டானார். ஆனாலும் மறுமுனையில் ஜேசன் சங்கா அதிரடியாக ஆடினார்.
பில்லிங்ஸ் 14 பந்துகளில் 20 ரன்களுக்கும், 19 பந்துகளில் ஆலிவர் 26 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய தொடக்க வீரர் ஜேசன் சங்கா 42 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், சிட்னி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
மிரட்டிய 2 கே கிட்:
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் பெறலாம் என்ற கனவுடன் ஹரிகேன்ஸ் அணியினர் களமிறங்கினர். அந்த அணிக்காக 23 வயதே ஆன மிட்செல் ஓவன் - கலீப் ஜுவெல் ஆட்டத்தை தொடங்கினர். களமிறங்கியது முதலே மிட்செல் ஓவன் பட்டாசாய் வெடித்தார். பந்துகளை சிக்ஸருக்கு மட்டுமே விளாசினார்.
சிக்ஸருக்கு முயற்சித்து தவறிய பந்துகளும் பவுண்டரிக்குச் சென்றது. கேப்டன் வார்னரும் நாதன் மெக் ஆண்ட்ரூ, டாம் ஆண்ட்ரூஸ், வெஸ் அகர், கிறிஸ் கிரீன், தன்வீர் சங்கா என மாறி, மாறி பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் ஒரு பயனும் அளிக்கவில்லை. மிட்செல் ஓவன் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன் அணி 7 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.
முதன்முறை சாம்பியன்:
பட்டாசாய் வெடித்த மிட்செல் ஓவனுக்கு எதிரே கம்பெனி கொடுத்த கலீப் ஜுவெல் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அவுட்டானபோது அந்த அணி 7.2 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த நிகில் சவுத்ரி 1 ரன்னில் அவுட்டானார். ஆனால், மறுமுனையில் பந்துகளை பறக்கவிட்டுக் கொண்டிருந்த மிட்செல் ஓவன் சதம் அடித்தார்.
ஹோபர்ட் அணி 139 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் ஓவன் அதிரடி முடிவுக்கு வந்தது. அவர் 42 பந்துகளில் 6 பவுண்டரி 11 சிக்ஸர் விளாசி 108 ரன்கள் எடுத்தார். 10.3 ஓவர்களில் 139 ரன்கள் எட்டியிருந்த ஹோபர்ட்ஸ் அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்து வந்த மேத்யூ வேட் வெற்றியை உறுதி செய்தார்.
ஹரிகேன்ஸ் சாம்பியன்ஸ்:
அவர் பவுண்டரிகளாக விளாச 14.1 ஓவர்களிலே ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பாண்டிற்கான பிக்பாஷ் லீக் சாம்பியன் பட்டத்தை நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வென்றது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதன்முறை ஆகும். வெற்றி பெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 14 வருடங்களாக இந்த தொடரில் ஆடி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் பெறாத ஹோபர்ட் ஹரிகேன்ஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.