கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்திற்கு பிறகு, ஆஸ்திரேலியா அணியின் லெவன் அணியில் இருந்து ஸ்டீ ஸ்மித் வெளியேற்றப்பட்டார். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் வரிசையில் சமகால சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தால், இவரை டி20 வீரராக அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, ஆஸ்திரேலியா டி20 அணியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டும், ஐபிஎல் போன்ற தொடர்களில் இவரை எடுக்க அணிகள் சற்று யோசனை செய்கின்றன.
இந்தநிலையில், தானும் ஒரு அதிரடி ஆட்டக்காரர்தான் என்பதை நடந்து வரும் பிக்பேஷ் டி20 லீக் தொடர் மூலம் ஸ்டீவ் ஸ்மித் நிரூபித்து உள்ளார். நடப்பு பிக்பேஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்மித், கடந்த 4 போட்டிகளில் 2 சதம், 1 அரைசதம் உள்பட 328 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல், வெறும் 4 போட்டிகள் மட்டுமே விளையாடி 22 சிக்ஸர்களை பறக்கவிட்டு, நடப்பு பிக்பேஷ் டி20 லீக் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்தநிலையில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்தில் 66 ரன்களை குவித்த ஸ்மித், நேற்று ஒரு பந்தில் 16 ரன்கள் எடுக்க வழி செய்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..?
பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஸ் பிலிப் களமிறங்கினர். ஆரம்பம் முதலே ஸ்மித் அதிரடி ஆக்ஷனில் இறங்க, பிலிப் 8 ரன்களில் நடையைக்கட்டினார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது 2வது ஓவரை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலர் ஜோயல் பாரிஸ் வீசினார். அப்போது 3வது பந்தை பாரிஸ் நோ பாலாக வீச, அந்த பந்தை ஸ்மித் சிக்ஸராக பறக்கவிட்டார். அந்த பந்தை நோ பாலாக அம்பயன் அறிவிக்க, ரீ பந்தை பாரிஸ் வைடாக வீச, அது விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கைகளில் சிக்காமல் பவுண்டரிக்கு சென்றது. தொடர்ந்து, மீண்டும் பாரிஸ் ரீ பந்தை வீச, அதையும் ஸ்மித் பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் ஒரே பந்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது. தற்போது, ஒரே ஓவரில் 16 ரன்கள் கிடைத்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.