India Vs Ireland: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 


இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. நாளை தொடங்கவுள்ள இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதாவது இந்த தொடர், தி வில்லேஜ்' மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 11 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிலான இந்த மைதானத்தில்தான் மூன்று போட்டிகளும் நடைபெறவுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுத்தீர்ந்ததாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 


ஆகஸ்ட் 18-ஆம் தேதி அதாவது நாளை இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணி அயர்லாந்தை சென்றடைந்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளத்தில்  ஏற்கனவே பகிர்ந்திருந்தது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர் ரிங்கு சிங். அதிரடியாக ஆடக்கூடிய இவர் சிறந்த ஃபினிஷராக ஐபிஎல் தொடரில் கருதப்படுகிறார். 


அனுபவ வீரர்களுக்கு ஓய்வு..


அயர்லாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் டி20 போட்டி 18ம் தேதியும்,  இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும். தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பையை கருத்தில் கொண்டு, அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து அனைத்து அனுபவ வீரர்களுக்கும் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.


இதையடுத்து, இந்திய அணியின் முழுநேர கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி : ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது , ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்


அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், ஃபியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொயிட், க்ராக் யெங்.