டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போலவே கிரிக்கெட்டை இன்னும் விறுவிறுப்பாக்குவதற்காக 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரட்ஸ் என்ற போட்டித் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் பங்கேற்று ஆடி வருகின்றனர்.


இந்த நிலையில், இந்த தொடரில் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியும், மான்செஸ்டர் ஒரிஜினல் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில்,நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆடுகிறார்.


பென் ஸ்டோக்சிற்கு காயம்:


முதலில் ஆடிய மான்செஸ்ட்ர்ஸ் அணி 152 ரன்கள் குவிக்க, 153 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய பென்ஸ்டோக்ஸ் ரன் எடுக்க வேகமாக ஓடியபோது அவருக்கு இடது காலின் பின்புற தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு பெரும்பாலும் இதுபோன்ற தசைபிடிப்பு ஏற்படும். குறிப்பாக, கிரிக்கெட் வீரர்களுக்கு இதுபோன்று அடிக்கடி ஏற்படும்.






இந்த தசைபிடிப்பு காரணமாக அவர்களால் ஓட இயலாத மற்றும் நடக்க இயலாத சூழல் ஏற்படும். பென் ஸ்டோக்சிற்கு தொடையின் பின்புறத்தில் ஏற்பட்ட காயம் மிகவும் வலுவாக அமைந்தது. இதனால், அவரால் நடக்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அவரை அணியின் சக வீரர்கள் தங்கள் தோளில் தாங்கி அழைத்துச் சென்றனர்.


பின்னர், அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் அவர் போட்டி முடிந்த பிறகும் ஊன்றுகோலின் உதவியுடனே மைதானத்தில் உலா வந்தார். அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நார்தர்ன் சார்ஜர்ஸ் அணி வெற்றி பெற்றது. காயம் அடைந்த பென் ஸ்டோக்ஸ் நேற்று நார்தர்ன் சார்ஜஸ் அணி களமிறங்கிய போட்டியில் ஆடவில்லை.


இலங்கைத் தொடரில் பங்கேற்பாரா?


இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. வரும் 21ம் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி காயம் காரணமாக இலங்கைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


இந்த சூழலில் பென் ஸ்டோக்சிற்கும் காயம் ஏற்பட்டிருப்பது அந்த அணியின் நிர்வாகத்திற்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் காயத்தின் தன்மை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 33 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் முதன்மையான ஆல்ரவுண்டர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.