ஐரோப்பாவில் நடைபெற்றுவரும் GT4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அவர் ஓட்டிய காரின் டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டயர் வெடித்து புகை வந்த நிலையில், அவர் உடனடியாக காரை நிறுத்தியதால் தப்பியுள்ளார்.
GT4 ஐரோப்பிய தொடரில் பங்கேற்றுள்ள அஜித்
கோலிவுட்டில் நடிகராக கலக்கிவரும் அஜித்குமார், கார், பைக் ரேஸ்-களிலும் பங்கேற்று வெற்றி பெற்று அசத்தி வருகிறார். ஏற்கனவே பல பந்தயங்களில் அவரது அணி வாகை சூடியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற அவரது அஜித்குமார் ரேஸிங் அணி, 3-ம் இடம் பிடித்தது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அதோடு, இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் இருந்தது.
அதைத் தொடர்ந்து, இத்தாலியில் நடந்த 12-வது மிச்லின் முகெல்லோ கார் பந்தயத்தில், அஜித்தின் அணி 3-வது இடம் பிடித்து அசத்தியது.
இந்நிலையில், நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் GT4 ஐரோப்பிய தொடர் கார் பந்தயத்தில் அவர் பங்கேற்றுள்ளார். அதில், தொடர்ந்து 60 நிமிடங்கள் கார் ஓட்டும் சவாலை அஜித் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த GT4 ஐரோப்பிய கார் பந்தயம் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ரேஸ் தொடங்கிய நிலையில், இன்று 2-வது சுற்று நடைபெற்றுள்ளது. அதில், அஜித் போர்ஷியா அணி சார்பாக பங்கேற்றுள்ளார்.
வெடித்த கார் டயர்.. தப்பிய அஜித்
இன்று நடைபெற்ற 2-வது சுற்று ரேஸின் போது, அஜித் ஓட்டிய காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டயர் வெடித்த நிலையில் புகை கிளம்பியதை பார்த்த அஜித், உடனே காரை நிறுத்தியதால், காயம் ஏதும் இன்றி தப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, கிரேன் உதவியுடன் ரேஸ் ட்ராக்கில் இருந்து அஜித் ஓட்டிய கார் அகற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான அவரது ‘குட் பேட் அக்லி‘ திரைப்படம் பெரும் ஹிட்டடித்த நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் நேரம் இருப்பதால், தற்போது ரேஸில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் அஜித். இதற்காக, தினமும் 6 மணி நேரம் வரை கார் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய கார் பந்தயத்தில் பங்கேற்ற அவரது கார் விபத்துக்குள்ளானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் காயம் ஏதுமின்றி தப்பியதால் நிம்மதி அடைந்துள்ளனர்.