வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
43 ஆண்டுகால சாதனை முறியடிப்பு:
வெறும் 82 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்காக பென் டக்கெட்டுடன் ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிக்ஸரும், பவுண்டரி என விளாசி 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்து இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதில் 9 பவுண்டரியும், 2 சிக்ஸரும் அடங்கும்.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ஆண்டுகால வரலாற்றை முறியடித்துள்ளார். அதாவது, இங்கிலாந்து அணிக்காக ஆடவர் டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
அதிவேக அரைசதம்:
பென் ஸ்டோக்ஸ் நேற்றைய போட்டியில் வெறும் 24 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதற்கு முன்பு இயான் போத்தம் 43 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 28 பந்துகளில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியிருந்தார். அதுவே இங்கிலாந்து வீரர் ஒருவர் டெஸ்டில் விளாசிய அதிவேக அரைசதமாக இருந்தது. அதை பென் ஸ்டோக்ஸ் தற்போது முறியடித்துள்ளார்.
சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் விளாசப்பட்ட அதிவேக அரைசதம் என்ற சாதனையை மிஸ்பா உல் ஹக் தன் வசம் வைத்துள்ளார். அவர் 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 21 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார். நேற்றைய போட்டியில் 18 பந்துகளில் 41 ரன்கள் என்று இருந்த பென் ஸ்டோக்ஸ் மிஸ்பா உல் ஹக் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை அவர் தவறவிட்டுவிட்டார்.
தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து:
முன்னதாக, பர்மிங்காமில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 376 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணிக்கு 82 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெறும் 7.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டியது.
ஸ்டோக்சுக்கு ஒத்துழைப்பு தந்த டக்கெட் 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்த 3-0 என்ற கணக்கில் மொத்தமாக கைப்பற்றியது.