உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணிகளில் எப்போதும் முக்கியமான அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. மேற்கத்திய அணிக்கு சவால் அளிக்கும் ஆசிய அணிகளில் பாகிஸ்தானும் முக்கிய அணியாகும். அந்த நாட்டிற்கு சென்ற இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னர், வெளிநாட்டு கிரிக்கெட் அணியினர் பாகிஸ்தான் செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.


நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வெளிநாட்டு அணிகள் மெல்ல, மெல்ல பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட செல்கின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளனர். இங்கிலாந்து அணி இஸ்லாமாபாத்தில் தற்போது தங்கியுள்ளனர்.






இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நெகிழ்ச்சிகரமான செயல் ஒன்றை செய்துள்ளார். அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் முதன்முறையாக விளையாட இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு டெஸ்ட் விளையாட வந்திருப்பது மிகவும் ஆர்வமாக உள்ளது. இங்கு விளையாடும்போது ஒரு பொறுப்புணர்வு உள்ளது.




இந்தாண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் வெள்ளத்தில் சிதிலமடைந்தது. இது மக்களுக்கும், நாட்டிற்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டு எனது வாழ்க்கையில் எனக்கு நிறைய அளித்துள்ளது. கிரிக்கெட்டை விட அதிகமாக எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உணர்கிறேன். இதனால், இந்த டெஸ்ட் தொடருக்கான போட்டிக் கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக வழங்குகிறேன். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க இந்த நிவாரணம் உதவும் என்று நம்புகிறேன்.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


பென் ஸ்டோக்ஸின் இந்த செயல் பாகிஸ்தானியர்கள் மட்டுமின்றி  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் பென் ஸ்டோக்சை பாராட்டி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் நாடு முழுவதும் 2 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானையே புரட்டிப்போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.