நியூசிலாந்து அணியுடனான தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், தென்னாப்பிரக்காவிற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வரும் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.




அதேசமயத்தில், பி.சி.சி.ஐ. நிர்வாகம் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக இனிமேல் ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி தானாக அறிவித்தார். அடுத்த உலககோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து, பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு ஆதரவாகவும், இந்திய அணி கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.






ஹர்சினி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட்கோலிக்கு தகுந்த மரியாதை அளித்தது. ஆனால், நீங்கள் ஒருபோதும் இந்த மனிதருக்கு தகுதியை அளிக்கவில்லை” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.


அபினவ் என்ற டுவிட்டர்வாசி, பாகுபலி படத்தில் பாகுபலி சரிந்து விழும் பல்வாள் தேவின் சிலையை தனி ஆளாக கயிற்றை இழுத்து நிறுத்தும் காட்சியையும், பாகுபலி முதுகில் கட்டப்பா குத்தும் காட்சியையும் பதிவிட்டு விராட்கோலி செய்ததும், விராட்கோலிக்கு பி.சி.சி.ஐ. செய்ததும் என்று பதிவிட்டுள்ளார்.






சாய் கிருஷ்ணா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுக்கு பி.சி.சி.ஐ. மிகப்பெரிய அநீதியை இழைத்துள்ளது. இதற்காக கடுமையாக வருந்துவீர்கள். விராட்கோலி உங்கள் அணியை ஒரு தசாப்தம் தாங்கி சுமந்தார். இது தகுந்த மரியாதை அல்ல.






























இவ்வாறு பலரும் டுவிட்டரில் பி.சி.சி.ஐ. தங்களது கடுமையான கண்டனங்களால் விமர்சித்து வருகின்றனர்.