2023 ஒருநாள் உலகக் கோப்பை: அக்டோபர் 14ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. 


இதையடுத்து, இந்த போட்டிக்கு மொத்தம் 14 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், இன்று மதியம் 12 மணி முதல் டிக்கெட் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 


எப்போது, ​​எப்படி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்?


இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் இந்தியா-பாகிஸ்தான் போட்டி டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தது. இதற்காக, https://tickets.cricketworldcup.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடும் மூன்றாவது போட்டி இதுவாகும். இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களமிறங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி (இன்று) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முன்னதாக வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டது. ஆனால், அன்றைய நாளில் அகமதாபாத்தில் நவராத்திரி பண்டிகை நடைபெற இருப்பதால் ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14ம் தேதி மாற்றப்பட்டது. 


முன்னதாக, 2023 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான தொடக்க ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மைதானத்தில் பாதி இருக்கைகளை கூட நிரம்பவில்லை.


ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அரைகுறையான மைதானங்களை காண்பது மனவருத்தத்தை அளிக்கிறது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இருப்பினும், உலகளாவிய ரசிகர்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் நேரலையில் கண்டுகளிக்கின்றனர். 






உலகக் கோப்பையில் இந்தியா அணி எப்போது, யாருடன் மோதுகிறது..? 


ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தானை அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் விளையாடுகிறது. அதே நேரத்தில், இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.


அதேநேரம் உலகக் கோப்பை 2023ல் நேற்று 2 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம். இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா இலங்கையை வீழ்த்தியது.