உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவிடம் பிசிசிஐ கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:


இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி:


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் தொடங்கியது. இந்த தொடரில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி தொடரின் 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி தான் இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.


ஆனால், நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்டோர் களத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.


அதேபோல், போட்டி முடிந்த சில நாட்களுக்கு பின்னரும் இந்திய அணி வீரர்கள் சோகத்துடனே காணப்பட்டனர். இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கும் இது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக, இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்படுத்தினார். இச்சூழலில், தற்போது 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியிருக்கிறது.


தோல்விக்கான காரணம்:


இந்நிலையில், தான் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்த காரணங்களை ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவிடம் பிசிசிஐ கேட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட், எதிர்பார்த்த அளவிற்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் விழாத காரணத்தால் ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி பெற்றதாக விளக்கம் அளித்துள்ளார்.


9 லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும், ஆனால் இறுதிப் போட்டியில் அவர்களுக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை சுழற்பந்துவீச்சுக்கு மைதானம் ஒத்துழைத்திருக்கும் பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கூறியுள்ளார் டிராவிட்.


பயிற்சியாளர்:


இதனிடையே, உலக கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் இந்திய அணிக்கான பயிற்சியாளர் ஒப்பந்தம் பதவி முடிவுக்கு வந்தது. ஆனால் ட்ராவிட் அவரது பொறுப்பில் அணியை சரியாக வழிநடத்தியதால் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பை வரை பயிற்சியாளர் பதவியை தொடருமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு ராகுல் டிராவிட்டும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Ban Vs NZ Test: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை! நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!


மேலும் படிக்க: Indian cricket: 'இங்க நான்தான் கிங்' சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி! சாதனை படைத்த இந்தியா!