Ban Vs NZ Test: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து - வங்கதேசம் மோதல்:
உலகக் கோப்பையை தொடர்ந்து வழங்கம் போல, சர்வதேச போட்டிகள் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளன. அந்த வகையில், நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த 28ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
நியூசிலாந்து - வங்கதேசம் முதல் டெஸ்ட்:
சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான மஹ்முதுல் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 86 ரன்களை சேர்க்க, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 104 ரன்கள் குவித்தார். வங்கதேசம் அணி சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
2வது இன்னிங்ஸில் வங்கதேசம் அபாரம்:
7 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது நஜ்முல் ஹொஷைன் ஷாண்டோ 105 ரன்கள் குவிக்க, அவருக்கு பக்கபலமாக முஷ்பிகுர் ரஹீம் 67 ரன்களையும், மெஹிதிஹாசன் 50 ரன்களை சேர்த்தனர். இதன் மூலம், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 338 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் அசாஜ் படேல் 4 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்:
இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், தொடக்க ஆட்டக்காரரான டாம் லாதம் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த டேரில் மிட்செல் 58 ரன்களையும், டிம் சவுதி 34 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம், 181 ரன்களை சேர்ப்பதற்குள் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம், 150 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணியை, வங்கதேசம் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ல், 1-0 என முன்னிலை வகிக்கிறது. வங்கதேசம் அணி சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.