உலகக்கோப்பை திருவிழா வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பு உலகக்கோப்பைக்கு ஒத்திகை பார்க்கும் விதமாக இந்திய அணி ஆசிய கோப்பைத் தொடரில் விளையாட உள்ளது. நடப்பு ஆசியகோப்பைத் தொடர் 50 ஓவர் வடிவத்தில் நடைபெற உள்ளது.


அஸ்வின் இல்லாத ஆசியக்கோப்பை:


இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மா தலைமையிலான இந்த அணியில் சுப்மன்கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல். இஷான்கிஷான், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா. ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், குல்தீப்யாதவ், பும்ரா, ஷமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர். சாம்சன் ரிசர்வ்ட் வீரராக உள்ளார்.


ஆசியக்கோப்பையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தியுள்ளது. ஆனாலும், அனுபவமிக்க அஸ்வின் இடம்பெறாதது ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, ஹர்திக்பாண்ட்யா, அக்‌ஷர் படேல் உள்ளனர்.


உலகக்கோப்பையிலும் கல்தாவா?


சுழலில் ஜடேஜாவும், அக்ஷர் படேலும் சிறப்பானவர்கள் என்றாலும் அவர்களை விட அஸ்வின் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஆசியக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இடம்பெற்ற வீரர்களில் பெரும்பாலானோர் உலகக்கோப்பையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


36 வயதான அஸ்வின் கடைசியாக கடந்தாண்டு ஜனவரியில் ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன்பின்பு, ஒன்றரை ஆண்டுகளாக அவர் எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டியிலும் ஆடவில்லை. இந்த நிலையில், ஆசியக்கோப்பையிலும் அஸ்வின் இடம்பெறாததால், ஒன்றரை ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் விளையாட ஒரு வீரரை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யமாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.


இந்திய அணிக்கு சாதகமா? பாதகமா?


மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் 113 ஒருநாள் போட்டியில் ஆடி 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கட்டுக்கோப்பாக பந்துவீசும் அஸ்வின் ஒருநாள் வடிவத்தில் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர். அவர் இதுவரை 813 ரன்களை எடுத்துள்ளார். அனுபவமிக்க அஸ்வின் ஆசிய கோப்பை தொடரில் இடம்பெறாததை கணக்கில் கொண்டு பார்த்தால், நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறி என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அஸ்வின் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி தோல்வியடைந்தது. பி.சி.சி.ஐ.யின் இந்த முடிவு இந்திய அணிக்கு சாதகமா? பாதகமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் படிக்க: Asia Cup 2023 India Squad: மீண்டு(ம்) வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி..!


மேலும் படிக்க: World Cup 2023: உலகக்கோப்பை 2023 அட்டவணையில் மீண்டும் மாற்றமா..? பிசிசிஐ துணைத்தலைவர் சொன்ன பதில்..